அக்பர் பாதுஷா டில்லியில் அரசாண்டபொழுது இந்தியாவில் சர்வ சமய சமரசம் நிலவியது. பாதுஷா ஒரு நல்ல முஸ்லீமாக இருந்த பொழுதிலும், இதர சமயத்தவர்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்கவில்லை. எல்லாச் சமயங்களுக்கும் அவர் பாதுகாப்பு அளித்து வந்தார். அவருடைய முக்கிய அமைச்சரான ராஜா மான்சிங், ராஜபுத்திரக் குறுநில மன்னர்; இந்து சமயப்பற்று மிக்கவர்.
ஒரு சமயம் ராஜா மான்சிங்கிடம் அக்பர் கேட்டார்:
"இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க எத்தனையோ தேவதைகளும் தூதுவர்களும் இருக்கும்பொழுது உங்களுடைய கடவுள் எதற்காகப் பூமியில் மனிதனாக வந்து அவதரிக்கிறார்? மக்களிடையில் தமது விருப்பத்தை நிறைவேற்ற, விண்ணுலகிலிருந்து அவரே மண்ணுலகிற்கு நேரில் வருவானேன்?'' என்றார்.
அதாவது, ‘இந்து சமயத்திலுள்ள பல்வேறு அவதாரங்களுக்கு அவசியம் என்ன?' என்பதுதான் இந்தக் கேள்வியின் பொருள். இதற்குச் சரியான மறுமொழியளிக்க ராஜா மான்சிங் அக்பர் பாதுஷாவிடம் ஒரு மாத அவகாசம் கேட்டார்.
ஒரு மாதத் தவணை முடிய இன்னும் ஒரே ஒரு நாள் தான் மீதி இருந்தது. ராஜா மான்சிங் எவ்விதமான பதிலும் சொல்லவில்லை. அவரைத் துன்பத்துக்கு உட்படுத்த விரும்பாத பாதுஷாவும் அவதார சம்பந்தமான தமது கேள்வியை அமைச்சருக்கு நினைவுபடுத்தவில்லை.
அன்று இரவு முழு நிலா. பாதுஷாவும் மான்சிங்கும் யமுனை நதியிலே அலங்காரப் படகில் உல்லாசமாகப் போய் வருவது என்று ஏற்பாடு. பாதுஷா திட்டமிட்டபடி இரவு எட்டு மணிக்கு யமுனை நதிக்கரைக்கு வந்துவிட்டார். ஆனால், மான்சிங்கைக் காணவில்லை. தம்மைக் காக்க வைத்தது குறித்து, பாதுஷா ஆத்திரமடைந்து கொண்டிருக்கையில், அரைமணி நேரத்திற்குப் பின் மான்சிங் தோளில் எதையோ சுமந்து கொண்டு வருவதை அவர் கண்டார்.
"உங்களுக்காக அரைமணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று வெறுப்புடன் சொன்னார் பாதுஷா.
“நான் என்ன செய்யட்டும்? தங்களோடு சேர்ந்து புறப்படலாமென்று அரண்மனைக்குப் போனேன். ஆனால் உங்கள் செல்வக் குமரன் என்னை விடவில்லை. நானும் வருவேன் என்று அடம் பிடித்தான். வேறு வழியில்லாமல் குழந்தையை நன்றாகப் போர்த்தி எடுத்துக் கொண்டு வந்தேன்” என்றார் மான்சிங்.
தம் குழந்தையும் வந்திருக்கிறது என்பதைக் கேட்டதும் பாதுஷாவின் கோபமெல்லாம் பறந்துவிட்டது. குளிர்காற்று வீசியதனால் போர்வையை எடுக்க விரும்பாத பாதுஷா, குழந்தையை மான்சிங்கே தூக்கி வர அனுமதித்தார், எல்லோரும் படகில் ஏறிக்கொண்டு உல்லாசப் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
அரைமணி நேரம் கழிந்ததும், "ஐயோ! குழந்தை துள்ளி ஆற்றில் விழுந்து விட்டதே!" என்று அலறினார் ராஜா மான்சிங். அவர் இப்படிக் கூப்பாடு போட்டதுதான் தாமதம், அடுத்த நிமிடமே அக்பர் பாதுஷா தமது குழந்தையைக் காப்பாற்ற ஆற்றில் பாய்ந்தார்.
கால்மணி நேரத்தில் அவர் குழந்தையுடன் படகில் திரும்ப ஏறிப் பார்த்தால், அவர் எடுத்துக் கொண்டு வந்தது உண்மையில் ஒரு குழந்தை இல்லை. தம் குழந்தையைப் போல் செய்த ஒரு மெழுகுப் பொம்மை!
"இதெல்லாம் என்ன நாடகம்?" என்று கோபத்தோடு கேட்டார் பாதுஷா.
"மன்னிக்க வேண்டும், பாதுஷா. இந்தப் படகில் எத்தனையோ காவலர் இருந்தும் நீங்கள் ஏன் என் கூக்குரலைக் கேட்டதும் ஆற்றில் பாய்ந்தீர்கள்? உங்கள் உத்தரவை நிறைவேற்றப் படகில் எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள்? அவர்கள் ஆற்றில் குதித்துக் குழந்தையைக் காப்பாற்ற மாட்டார்களா? உங்கள் குழந்தை என்றதும் உங்களுடைய ஆசையும் பாசமும் பிறருடைய கையை எதிர்பார்க்காமல் உங்களை ஆற்றில் குதிக்கச் செய்தன. நாங்கள் வழிபடும் இறைவனும் அப்படித்தான். தனக்கு எத்தனை ஏவலாளர்களும் தூதுவர்களும் இருந்தபோதிலும், தன் குழந்தைகளான மக்கள் குலம் தவறிழைக்கும் பொழுது மக்கள் குலத்திடம் கொண்ட ஆசையினாலும் பாசத்தினாலும் பிறர் கையை எதிர்பார்க்காமல், தானே உலகில் வந்து அவதரிக்கிறான். இதுதான் இந்து சமயக் கடவுளின் அவதார ரகசியம். இதை விளக்கத் தாங்கள் ஒரு மாதகாலம் அவகாசம் கொடுத்தீர்கள். தவணை முடிவதற்குள்ளாகவே பதில் சொல்லி விட்டேன்” என்றார் ராஜா மான்சிங்.
அவருடைய மதிநுட்பத்தைப் பாராட்டினார் பாதுஷா.