சக்கரவர்த்தி அசோகரின் பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்தது. பிரதேச அதிகாரிகள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர்.
“பிரதேச அதிபதிகளுக்குள் மிகச் சிறந்தவருக்குப் பரிசு கொடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
உடனே உத்தரப்பிரதேச அதிபதி எழுந்து நின்றார். “மகாராஜா, நான் இந்த வருஷம் வழக்கத்தைவிட மூன்று பங்கு வரி மக்களிடமிருந்து வசூலித்திருக்கிறேன்'' என்றார்.
பிறகு தென்பிரதேசத்தின் அதிபதி எழுந்து நின்றார். ''மகாராஜா! வழக்கத்தை விட இரண்டு மடங்கு பணம் நான் அரசாங்கக் கஜானாவில் சேர்த்துள்ளேன்'' என்றார்.
கிழக்குப் பிரதேசத்தின் அதிபதி எழுந்து நின்றார். “நாட்டுக்கு எதிராகக் கிளம்பிய அநேகரை நான் அடக்கிச் சிறையிலிட்டிருக்கிறேன்'' என்றார்.
மேற்குப் பிரதேசத்தின் அதிபதி எழுந்து நின்றார். “நான் இந்த வருஷம் புதுப்புது வரிகள் போட்டு வசூலை அதிகரித்திருக்கிறேன். அதே சமயம் அரசுச் சிப்பந்திகளின் சம்பளத்தையும் குறைத்துள்ளேன், அதனால் அரசாங்கத்துக்கு முன்னைவிட அதிகப் பணம் கிடைத்திருக்கிறது'' என்றார்.
கடைசியில் மகத தேசாதிபதி எழுந்தார். "மகாராஜா! என்னை மன்னிக்க வேண்டும். போன வருடம் சேர்த்த பணத்தில் கால் பங்கு கூட நான் இந்த வருடம் கஜானாவில் சேர்க்க முடியவில்லை. மக்கள் விளைச்சல் இல்லாமல் கஷ்டப்பட்டதனால் நான் வரியே வசூலிக்கவில்லை. அத்துடன் பள்ளிகள், தர்மசாலைகள், குளங்கள் முதலியன கட்டுவதில் இந்த வருடம் அதிகம் செலவழித்து விட்டேன். சிப்பந்திகளின் சம்பளத்தை வேறு அதிகரித்தேன்'' என்றார்.
அசோக சக்கரவர்த்தி தம் சிம்மாசனத்திலிருந்து எழுந்து நின்றார்.
"இந்த வருடச் சிறந்த அதிபதி மகத தேசாதிபதி என்பதில் சந்தேகமில்லை. இந்த வருடப் பரிசு அவருக்குச் செல்கிறது. மக்களைக் கஷ்டப்படுத்தி வரி வாங்குவதை நான் விரும்பவில்லை. அரசாங்கத்துக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதற்காக மக்களைச் சிறையில் அடைக்கும் வழக்கத்தையும் நான் விரும்பவில்லை. மக்களுக்கு உங்களால் எவ்வளவு உதவ முடியுமோ அவ்வளவு உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.