இலங்கையில் அரக்கர்களின் மன்னராக விபீஷணர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஒவ்வோர் ஏகாதசியிலும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ஸ்ரீரங்கநாதரைப் பூஜித்துப் போவது வழக்கம்.
இது கோவில் அர்ச்சகர் ஒருவருக்குத் தெரிய வந்தது. அந்த அர்ச்சகர் ஒரு நாள் ஏகாதசியன்று விபீஷணர் வருவதைக் குறிப்பாகப் பார்த்து, அவருடைய புஷ்பக் குடலைக்குள் புகுந்து, ஓர் மூலையில் பதுங்கிக் கொண்டார்.
விபீஷணர் பூஜை முடிந்தபின் வழக்கம்போல் குடலையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.
ராட்சஸர்களுக்கு மனிதர்கள் எறும்பு போன்றவர்கள். ஓர் எறும்பு ஏதேனும் ஒரு பாத்திரத்திற்குள் நுழைந்தால், அதனால் பாத்திரம் பளுவாகத் தோன்றாது. அதுபோல விபீஷணருக்குக் குடலை பளுவாகவே தோன்றவில்லை.
பிறகு விபீஷணர் வழக்கம் போல் புஷ்பக் கூடையைக் கவிழ்க்க, அதிலிருந்து அர்ச்சகர் பொத்தென்று விழுந்தார். அவரைக் கண்ட ராட்சஸர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
விபீஷணருக்கு அர்ச்சகரிடம் தயை உண்டாயிற்று. அவர், "அடே அர்ச்சகா, உன் தைரியத்தை மெச்சினேன். உனக்கு வேண்டியதைக் கேள், தருகிறேன்'' என்றார்.
அர்ச்சகர் அங்குமிங்கும் பார்த்தார். எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமயமாக இருந்தது. முத்துக்களும் ரத்தினங்களும் வீதிகளில் சரளைக் கற்களைப் போல் சர்வசாதாரணமாக விழுந்து கிடந்தன. அவற்றில் இன்ன கற்கள் தாம் அதிக விலையுள்ளன என்று அர்ச்சகரால் அறிந்து கொள்ள முடியவில்லை. டால் வீசுகிறது. கண் கூசுகிறது. அர்ச்சகருடைய ஆசை அதிகரித்தது.
அவர் மிகுந்த விலையுள்ள ரத்தினங்களைக் கொண்டு போக எண்ணி, விபீஷணரை நோக்கி, “அரசே, இந்த ஊரில் விலை மதிக்கவே இயலாத மிக மிக அபூர்வமான பொருள் எதுவோ அதை எனக்குக் கொடுக்க வேண்டும்" என்றார்.
உடனே விபீஷணர் அவ்வாறே இலங்கை ராஜ்யத்திலேயே கிடைப்பதற்கு அரிய அபூர்வமான பொருளை அர்ச்சகருக்குக் கொடுக்கும்படி பொக்கிஷதாரருக்கு உத்தரவு செய்தார்.
பொக்கிஷதாரர் ஒரு பெரிய பெட்டியில் பத்திரமாய் வைத்திருந்த சிறிய ஓர் ஊசியைக் கொண்டுவந்து அர்ச்சகர் கையில் கொடுத்து, "சுவாமி, உங்கள் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! எங்கள் ராஜா அபூர்வமான இந்த ஊசியை எங்கிருந்தோ சம்பாதித்து வந்து மிகவும் பாதுகாப்புடன் இதுவரையிலும் வைத்திருந்தார். இந்த ஊரில் இந்த ஒரே ஓர் இரும்புச் சாமான் தான் மிகவும் அபூர்வமாக இருந்தது. அப்படிப்பட்ட அருமையான இந்தப் பொருளை எங்கள் அரசர் தங்களுக்குக் கொடுத்துவிட்டாரே! தாங்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியசாலி. இனி நாங்கள் இரும்புச் சாமானை எப்போது காணப்போகிறோம்?" என்றார்.
அர்ச்சகருக்கு உண்டான மனவருத்தத்தை யார்தாம் அளவிட்டுச் சொல்ல முடியும்? இதற்குள்ளாக விபீஷணரின் கட்டளைப்படி ஒரு ராட்சஸன் அர்ச்சகரைத் தூக்கிக்கொண்டு, ஆகாயத்தில் பறந்து, ஸ்ரீரங்கத்தில் இறங்கி, அங்கேயுள்ள அம்மா மண்டபத்தினடியில் எறிந்துவிட்டு, இலங்கைக்குப் போய்ச் சேர்ந்தான்.
அப்போது பொழுது விடிய இரண்டு நாழிகை இருந்தன. அந்தச் சமயத்தில் காவேரியில் நீராடிவிட்டு, 'ரங்கநாதா, ரங்கநாதா' என்று ஒரு வைணவர் தியானம் செய்து கொண்டு மண்டபத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.
அவர் தலையில் இந்த அர்ச்சகர் தொப்பென்று விழுந்தார். 'அடடா, இதென்ன பெரிய ஒரு கட்டை தலையில் விழுந்ததே!' என்று அந்த வைணவர் பார்த்தார்.
ஆசாமி எதிரில் நின்றார். உடனே கூட்டம் கூடியது, ஊசி சமாசாரம் எல்லோருக்கும் தெரிந்தது. அங்கு வந்த பெண்பிள்ளைகள் எல்லோரும் அர்ச்சகரை நோக்கி உருண்டு உருண்டு சிரித்தார்கள்.
இதனால் மனிதன் எப்போதும் கடவுளை நம்பி, அவர் கொடுப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்றும், அதிகமாக ஆசைப்படுவதில் வீண்முயற்சியே தவிர உபயோகமில்லை என்றும் அறிகிறோம்.