பாக்தாத் நகரில் ஒரு காலிப் (அரசர்) இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர். தமது செலவுக்காக அரசாங்கக் கஜானாவிலிருந்து தினம் மூன்று காசுகள்தாம் எடுத்துக் கொள்வார். அதற்கு மேல் எடுத்துக்கொள்வது பாவம் என்று கருதினார்.
ஈத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. குழந்தைகளுக்குப் புது ஆடைகள் தைக்க வேண்டும்.
எனவே அரசரின் மனைவி அவரைப் பார்த்து, ''மூன்று நாள் சம்பளத்தை எனக்குச் சேர்ந்தாற் போலக் கொடுத்தால், நான் குழந்தைகளுக்குப் புதுச்சட்டைகள் தைத்துக் கொடுக்க முடியும். கொடுக்க முடியுமா?'' என்று கேட்டாள்.
அதற்குக் காலிப், "கஜானாவிலிருந்து மூன்று நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்வது நியாயம் என்று எனக்குப் படவில்லை. நான் இன்னும் மூன்று நாட்கள் நிச்சயம் உயிரோடு இருப்பேன் என்பது என்ன நிச்சயம்? நாளைக்கே எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் மீதிக் கடனை யார் அடைப்பது?'' என்று கேட்டார்.
அதற்குப் பதில் சொல்ல முடியாமல் ராணி தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.