"தர்மா, துரியோதனா! இருவரும் இங்கே வாருங்கள்” - துரோணர் அழைத்தார்.
பாண்டவர்களில் மூத்தவனான தர்மனும், கௌரவர்களில் மூத்தவனான துரியோதனனும் அவரருகில் வந்தனர்.
இருவரையும் துரோணர் தட்டிக் கொடுத்தார். பீஷ்மர் அவர்கள் இருவரிடமும் தலைக்கு ஒரு பொற்காசு வீதம் கொடுத்தார்.
“குழந்தைகளே! இந்தப் பொற்காசு எதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது, தெரியுமா?''
சிறுவர்கள் தெரியாதென்று தலையசைத்தனர்.
இரண்டு சிறிய வீடுகளைத் துரோணர் சுட்டிக் காட்டினார்.
"தர்மா! அது பாண்டவர்களின் வீடு. துரியோதனா! இது கௌரவர்களின் வீடு. காலியாக இருக்கும் இந்த வீடுகளை நீங்கள் நிரப்ப வேண்டும். எதை வேண்டுமானாலும் வாங்கி நிரப்பலாம். ஆனால், கொடுத்திருக்கும் பொற்காசுக்குத்தான் நிரப்ப வேண்டும். இதன் மூலம் பாண்டவர் கெட்டிக்காரர்களா அல்லது கௌரவர் கெட்டிக்காரர்களா என்று பார்க்கப் போகிறேன்...!'' என்றார் அவர்.
பொற்காசுகளுடன் தர்மரும் துரியோதனனும் சகோதரர்களை அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டினுள் சென்றனர்.
"ஏ அப்பா! இவ்வளவு பெரிய வீட்டை நிரப்ப ஒரே ஒரு பொற்காசா! இது எதற்கடா துச்சாதனா போதும்?'' துரியோதனன் கேட்டான்.
''அண்ணா! கவலையை விடு. நான் சொல்வது போலச் செய்தால் போதும். ரொப்பி விடலாம் ரொப்பி!" குதூகலத்தோடு துச்சாதனன் கூறிய யோசனையைக் கேட்டதும் துரியோதனன் தலையைப் பலமாக ஆட்டினான்.
கௌரவர்கள் நூறு பேரும் கடைவீதியை நோக்கி விரைந்தனர்.
அதே சமயம், பாண்டவர்கள்? அவர்களும் சிந்தித்துக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், ஒரு முடிவுமே அவர்கள் மனத்திற்குப் பிடிக்கவில்லை. சிந்தித்துச் சிந்தித்து அவர்கள் குழப்பமடைந்த நேரத்தில் சூரியன் மலைவாயில் விழுந்தான். எங்கும் இருள் சூழ்ந்தது.
ஐவரும் ஒரே சமயத்தில் விரல்களைச் சொடுக்கினார்கள். அவர்கள் மனத்தில் ஒரே யோசனை உதயமாகியிருந்தது. அவர்களும் கடைத்தெருவிற்குச் சென்றனர்.
இரவு, உணவை முடித்துக் கொண்டு பெரியவர்கள் துரோணருடன் புறப்பட்டனர். சிறுவர் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அவர்கள் சென்றனர்.
முதலில் கௌரவர்களின் வீடு. கதவின் தாழையேத் திறக்க முடியவில்லை. மற்றச் சிறுவர்கள் கதவை அழுத்திப் பிடித்துக் கொள்ள, துரியோதனன் தாழ்ப்பாளை நகர்த்தினான். கதவு தானாகத் திறந்து கொண்டது.
கௌரவர் வீடு நிறைய அடைத்து வைத்திருந்த பொருள் பிதுங்கி எட்டிப் பார்த்தது. பெரியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பிதுங்கிய அந்தப் பொருள்? வெறும் வைக்கோல்தான்!
அடுத்து அனைவரும் பாண்டவர்களின் வீட்டிற்குச் சென்றனர்.
பாண்டவர் ஐவரும் பெரியவர்களையும் குருவையும் வணங்கினார்கள். பிறகு, தர்மன் தாழை நகர்த்திக் கதவைத் திறந்தான். அனைவரும் உள்ளே சென்றனர்.
வீடு காலியாக இருப்பதைக் கண்டு துரியோதனன் கேலியாக உரக்கச் சிரித்தான். ஆனால், மற்றவர்கள்? அவர்கள் மெய்மறந்து நின்றுவிட்டனர்.
வீடு முழுவதும் நிரம்பி வழிந்தது, தீபங்களின் ஒளி, தூபங்களின் நறுமணம். எல்லாவற்றுக்கும் மேலாகச் சுவரருகில் வில், வாள், கேடயம் முதலியவை - அவை பாண்டவர்களுடையவை - சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தன.
பளபளவென்று அவை வெளிச்சத்தில் தங்கத்தைப் போல் மின்னிக்கொண்டிருந்தன.
பாண்டவர்கள் துரோணரின் மனத்தில் இடம் பிடித்துவிட்டனர்!