ஒரு குரு அடிக்கடி கோபம் வந்து தனது சீடர்களை சபித்துக் கொண்டே இருப்பார்.
எல்லோரும் பயந்து கொண்டு குருவை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.
ஒரே ஒரு சீடன் மட்டும் அவரது குணத்தை மாற்ற நினைத்தான்.
ஒருநாள் அவனை அவர், ''நீ நரகத்திற்குத்தான் போவாய்'' என்று சபித்தார்.
உடனே அந்த சீடன் ''அப்படியே மகிழ்ச்சியுடன் போகிறேன்'' என்றான்.
குருவுக்கு வியப்பு தாங்கவில்லை. ''ஏன் அங்கே போக சம்மதிக்கிறாய்?'' என்று கேட்டார் அவர்.
அதற்கு சீடன் கூறினான்: ''சீடர்கள் செய்யும் சிறு தவறுகளைத் திருத்தி நல்வழி காட்ட வேண்டியவர் குரு. அவர் அப்படிச் செய்யாமல் அடிக்கடி கோபப்பட்டு சீடர்களை 'நரகத்திற்குப் போ, போ' என்று விரட்டி சாபம் கொடுத்துக் கொண்டேயிருந்தால், அவர் கட்டாயம் நரகத்திற்குத்தான் போவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. குரு இருக்கும் இடம்தான் சொர்க்கம் என்ற நம்பிக்கையும் எண்ணமும் உடையவன் நான். ஆகவே நீங்கள் போகிற இடத்துக்கு நானும் வர வேண்டுமென்றால், நானும் நரகத்திற்குத்தானேப் போக வேண்டும்? அதனால்தான் அங்கேப் போகச் சம்மதித்தேன்'' என்றான். குரு மனம் திருந்தினார்.