ராமன் லட்சுமணன் சீதை ஆகிய மூவரும் தண்டகவனத்தில் இருந்த போது அங்கே சுகுப்தி, குப்தி என்ற இரண்டு சாரண முனிவர் இருந்தனர்.
ராமன் பணிவுடனும் பக்தியுடனும் அமைதியே உருவமான அந்த முனிபுங்கவர்களுக்கு ஆகாரம் கொடுத்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அவன் கொடுத்த ஆகாரத் தானத்தின் சிறப்பினால் மலர்மாரி பொழிந்தது; மணமுள்ள குளிர்ந்த காற்றும் வீசியது; தேவமுரசு முழங்கிற்று. ஜயஜய ஒலி எழுந்தது; மணி மாரி பெய்தது. இவை ஜந்தும் வியப்பிற்கு உரிய செயல்களாகும்.
ராமனும் லட்சுமணனும் சீதையும் முனிவர்களுக்கு ஆகாரம் கொடுத்த போது, அங்கிருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்த பருந்து ஆகார தானத்தைப் பக்தியுடன் பார்த்தது.
முனிவரின் உருவத்தைக் கண்டவுடனே அவர்களின் தவத்தின் பெருமையினால் அந்தப் பருந்துக்குத் தன் முற்பிறவியின் நினைவுகள் வந்தன.
"முன்பு நான் மனிதப் பிறவியில் இருந்தபோது சோம்பலுக்கு உட்பட்டு, விவேகம் இழந்து, தவம் செய்யாமல் காலத்தை வீணாகக் கழித்துவிட்டேன். அதனால்தான் நான் இப்பொழுது இந்தக் கீழ்த்தரமான பிறவியில் வந்து பிறந்துள்ளேன். நான் எந்த வழியைக் கடைப்பிடித்து இந்தப் பிறவியிலிருந்து விடுபடுவது?' என்று மனதில் நினைத்த அந்தப்பறவை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது. தரையில் முனிபுங்கவர் பாதங்களைக் கழுவிய நீரால் அது தன் உடலைப் புனிதப்படுத்திக் கொண்டது.
தவத்தோர் பாதங்களைக் கழுவிய தண்ணிரில் பறவை மூழ்கியவுடனே அதன் உடல் முழுவதும் பொன்வண்ணமாகவும் ஒளிவீசும் மணியைப் போன்று ஒளிமயமாகவும் ஆகிவிட்டது.
இதைக் கண்ட ராமன் முனிவர்களிடம், “இந்தப் பறவையின் உடல் முன்பு அழகு குலைந்து மங்கிய ஒளியுடன் கூடியதாக இருந்தது. ஆனால் நொடி நேரத்திலேயே இதன் உடல் ஒளிமயமாகவும் பொன்வண்ணமாகவும் ஆனதற்குக் காரணம் என்ன? இதனுடைய முற்பிறவியின் வரலாறு என்ன?'' என்று கேட்டான்.
சுகுப்தி முனிவர் கூறினார்: முன்பு இந்தப் பறவை செல்வமும் எழிலும் சூழ்ந்த தண்டகம் என்ற நகரத்திற்கு வேந்தனாக இருந்தது. அப்பொழுது செருக்கினால் நல்லவை தீயவைகளை அறியாமல் மனம் போன போக்குப்படி அலைந்தும் திரிந்து கொண்டும் இருந்த வேளையில் தவ வலிமை படைத்துத் தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவரின் கழுத்திலே இறந்த பாம்பை இவன் போட்டுவிட்டான். கொடுமைச் செயலில் ஈடுபாடு கொண்ட இவன் பல முனிவர்களுக்குத் தொல்லை கொடுத்து அவர்களை மரணத்திற்கு உட்படுத்தி வந்தான்.
இத்தகையக் கொடிய பாவத்தைச் செய்ததன் பயனாக நரகத்தில் போய்ப் பிறந்தான். அங்கிருந்து பல விலங்குப் பிறவிகளிலே சுழன்று, பல இன்னல்களை அனுபவித்து இப்பொழுது இந்தப் பிறவியில் பிறந்துள்ளான் என்றார்.
பிறகு முனிவர் பறவையிடம், ''பறவைகளுக்கு அரசனே! நீ அஞ்ச வேண்டாம். வருத்தப்பட வேண்டாம். நடக்க வேண்டியது நடந்துவிட்டது. கடந்ததைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்பொழுது நீ தவ விரதத்தைக் கடைப்பிடி. இனி உனக்குத் துன்பம் வராது. நீ அமைதியைக் கடைப்பிடி. எந்த உயிரையும் கொல்லாதே. பொய் களவு காமம் ஆகியவற்றை விடு. முழுப் பிரம்மசரியத்துடன் இருந்து பொறுமையைக் கடைப்பிடி. பிறரிடம் அன்பாகவும் பரோபகாரமாகவும் நடந்துகொள். தர்மவழியைப் பின்பற்று, தூயவாழ்க்கை நடத்து. கூடியமட்டும் உபவாசம் கடைப்பிடி'' என்று கூறினார்.
முனிபுங்கவர் உபதேசிக்க, அந்தப் பறவை தலைகுனிந்து அவர் கூறியவாறு விரதத்தைக் கைக்கொண்டது.
சீதைக்கு அந்தப் பறவையிடம் கருணை இருந்ததனால் முனிவர் சீதையிடம், “கொடிய விலங்குகள் வாழும் இந்தக் காட்டில் நீ இந்தப் பறவையை நன்கு பாதுகாக்க வேண்டும்'' என்றார்.
அந்தப் பறவையின் இறகு தங்கத்தின் வண்ணம் போன்ற ஒளிமயமாக இருந்தமையால் அதற்கு ஜடாயு என்ற பெயர் வழங்கலாயிற்று. அதனிடம் அற்புதமான அறப்பற்று இடம் கொண்டது. கொடுமையான இயல்பையுடைய பறவையின் பிறவியில் தோன்றிய அந்தப் பருந்தின் உள்ளம் கருணையுடையதாகவும், பிறர் மனதைக் கவரும் வண்ணமாகவும் இருந்தது.
அந்தப் பறவை பக்திக்கு உட்பட்டு அடக்கத்துடன் மூன்று வேளையும் சீதையுடன் ஜினபகவான், சித்த பகவான், முனிபுங்கவர் ஆகியவர்களை வணங்கி வந்தது. கருணைக் கடலான சீதை அதன் மீது அன்பு கொண்டு அதைத் தனதாகக் கருதலானாள்.
சீதையின் அழகிற்குக் கட்டுண்டு அவளை அடையும் பொருட்டு மாசுமனம் படைத்த ராவணன் அவளைத் தூக்கிக் கொண்டு போனபோது, செய்ந்நன்றி மறவாத ஜடாயு ராவணன் மீது பாய்ந்து தன் முழுப் பலத்தையும் செலுத்திச் சீதையைக் காப்பாற்றப் போரிட்டது. புலனடக்கமில்லாத மயக்கத்தில் மூழ்கிய ராவணன் தன்னலத்தைச் சாதிக்கும் சக்திக்குக் குறுக்கே நின்ற அந்தப் பறவையைக் கடுமையாகத் தாக்கினான். இதனால் அது மயக்கமுற்று வீழ்ந்தது.
ராமன் திரும்பி வந்தபோது அவ்விடத்தில் சீதை இல்லாததையும், ஜடாயு மரணத்துடன் போரிட்டுக் கொண்டிருப்பதையும் கண்டான்.
அப்போது வருத்தமுற்று, பறவை மீது கருணைகொண்ட ராமன் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவுக்கு, ‘ணமோங்கார மந்திரம்' என்ற பஞ்ச மந்திரத்தைக் காதில் ஓதினான். அந்த மந்திரத்தைக் கேட்டதன் விளைவாக ஜடாயு தேவலோகத்தில் தேவனாகப் பிறந்தது.