சீன ஞானி கன்ஃபூசியஸ், ஒருநாள் தமது சீடர்களுடன் டாயீ மலைப்பக்கம் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு பெண்ணின் அழுகைக் குரல் கேட்டது.
ஒரு சமாதிக்கு அருகே பெண்ணொருத்தி துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்தாள்.
தன் சீடனை அனுப்பி விசாரிக்கச் சொன்னார் ஞானி.
"பெரியவரே! நான் என்ன சொல்வேன்? முதலில் என் கணவரின் தகப்பனாரை இங்கே ஒரு புலி அடித்துக் கொன்றது! அதே புலி பிறகு என் கணவரையும் கொன்றது! ஆனால், இப்போதோ என் மகளையும் அந்தப் புலி அடித்துக் கொன்றுவிட்டது!'' என்றாள் அவள்.
“அப்படியானால் இந்தக் காட்டை விட்டு நாட்டுக்குள் சென்று வாழ்வதுதானே!'' என்று கேட்டான் சீடன்.
"நாடா இது? நாட்டில்தான் கொடுங்கோலாட்சி நடக்கிறதே! அங்கு எப்படிப் போவேன்'' என்றாள் பெண்!
இதைக் கேட்ட கன்ஃபூசியஸ் சொன்னார்:
''சீடர்களே! இது நினைவிருக்கட்டும். கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிற்கு கடும்புலி வாழும் காடு நன்றே!''
மனிதன் மிருகமாகி விட்டால், மிருகத்திற்கே மதிப்பு வந்துவிடுகிறது பார்த்தீர்களா?