ஒரு குருவிடம் சீடன் ஒருவன் சென்று, யாருக்கும் கிடைக்காத அமிர்தம் எனக்குக் கொடுக்க வேண்டும்'' என்று கேட்டான்.
சீடனின் பேராசையைக் கண்ட குரு 'இவனிடம் அமிர்தம் கொடுத்தாலும் இவனால் அதை அனுபவிக்க முடியாது' என்பதைப் புரிந்து கொண்டார்.
அவர் அந்தச் சீடனிடம் ஒரு குடத்தில் அமிர்தம் கொடுத்து, 'இதை எங்கும் தரையில் வைக்காமல் தூக்கிச் சென்று வீட்டில் அருந்து'' என்று கூறினார்,
அவர் சொன்னபடியே சீடன் குடத்தை எடுத்து வரும்போது, வழியில் இருந்த ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க விரும்பினான். 'குடத்தைக் கீழே வைக்கக் கூடாது' என்று குரு கூறியது நினைவுக்கு வந்தது.
'என்ன செய்வது?' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் தருவாயில் அந்த வழியாக யாரோ ஒருவன் வந்தான்.
''அமிர்த குடம்'' என்று சொல்லி அவன் கையில் கொடுத்தால் அவன் அதைக் குடித்து விடுவானோ என்று பயந்த சீடன், ''இந்தக் குடத்தில் விஷம் இருக்கிறது. இதைக் கொஞ்ச நேரம் நீ கையில் வைத்திரு. நான் நீர் அருந்திய பிறகு வந்து உன்னிடமிருந்து வாங்கிக் கொள்கிறேன்'' என்று சாமர்த்தியமாகச் சொல்லி, அந்த மனிதனிடம் அமிர்தக் குடத்தைக் கொடுத்துவிட்டுக் குளத்தில் இறங்கினான்.
அவன் திரும்பி வந்து பார்த்தபோது, குடம் காலியாக இருந்தது!
குடத்தை வாங்கிய மனிதன் தீராத வயிற்று வலியால் துன்பப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ள விரும்பி அதற்கு வழியைத் தேடிக்கொண்டிருந்தவன். ஆகவே 'விஷம்' நிரம்பிய குடத்தைக் கண்டதும், 'என் ஆயுளுக்கு முடிவு கட்ட இது சரியான வாய்ப்பு!' என்று நினைத்துக் குடத்தில் இருந்ததைக் குடித்துவிட்டான்.
ஆனால் அமிர்தம் அவன் வயிற்றில் சென்றதால் அவன் வயிற்றுவலி தீர்ந்தது!