அந்தக் காலத்தில் ஞானி ஒருவர் இருந்தார். அவர் பெயர் டயோஜனிஸ். ஆற்றங்கரை மணலில் அவர் சும்மா படுத்திருந்தார்.
அலெக்சாண்டர் இந்தியாவிற்குப் புறப்பட்டபோது அவரைச் சென்று சந்தித்தார்.
ஞானி அவரிடம், “நீ எங்கே போகிறாய்? எதற்காகப் போகிறாய்?" என்று கேட்டார்.
"நான் ஆசியாவை வெல்லப் போகிறேன்!” என்றார் அலெக்சாண்டர்.
"அதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாய்?” என்று ஞானி வினவினார்.
"இந்தியாவை வெல்வேன்!" என்றார் அலெக்சாண்டர்.
"அதன் பின்பு?” என்று மீண்டும் கேட்டார் அந்த ஞானி.
"உலகத்தையே வெல்வேன்!” என்றார் அலெக்சாண்டர்.
"உலகம் முழுவதையும் ஜெயித்தற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாய்?" என்று டயோஜனிஸ் மறுபடியும் கேட்டார்.
"அதன் பின்னர் நான் நிம்மதியாக ஓய்வெடுப்பேன்!” என்றார் அலெக்சாண்டர்.
அந்தப் பதிலைக் கேட்டதும் ஆற்று மணலில் படுத்திருந்த அந்த ஞானி சத்தம் போட்டுச் சிரித்தார்.
கொஞ்ச தூரத்தில் படுத்திருந்த தன்னுடைய நாயைக் கூப்பிட்டார். அது அவர் பக்கத்தில் வந்து நின்றது.
ஞானி அந்த நாயிடம் சொன்னார்:
"இவர் சொல்வதைப் பார்த்தாயா? உலகத்தையெல்லாம் ஜெயித்தற்குப் பிறகு, இந்த மனிதர் ஓய்வெடுக்கப் போகிறாராம்! ஆனால் நாம் இருவரும் இங்கே ஒரு சின்ன இடத்தைக் கூட ஜெயிக்காமல் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம்!” என்றார்.
நாயிடம் இப்படி சொல்லிவிட்டு அந்த ஞானி அலெக்சாண்டரைப் பார்த்துச் சொன்னார்:
"இதோ பாரப்பா, ஓய்வுதான் உன்னுடைய கடைசி இலட்சியம் என்றால், இந்த அழகான ஆற்றங்கரையில் எங்களுடன் நீ இப்போதேச் சேர்ந்து கொள்ளலாமே! கடைசியில் ஓய்வெடுப்பதற்காக ஏன் உலகம் முழுவதையும் துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? இப்போதே, இங்கேயே நீ ஓய்வெடுக்கலாமே!'' என்றார்.
அதைக் கேட்டதும் அலெக்சாண்டர் ஒரு மாதிரி ஆகிவிட்டார்.
“நீங்கள் சொல்வது அறிவுப்பூர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் இப்போது ஓய்வெடுக்க முடியாது. முதலில் உலகத்தை ஜெயித்துவிடுகிறேன்!” என்றார்.
"உலகத்தை ஜெயிப்பதற்கும் ஒய்வெடுப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே!” என்றார் டயோஜனிஸ்.
“நீங்கள் சொல்வது நியாயம்தான். ஆனால் நான் ஏற்கனவேப் புறப்பட்டுவிட்டேன். பாதியில் பின்வாங்க வழியில்லை" என்றார் அலெக்சாண்டர்.
ஞானி சொன்னார்: “நீ பாதி வழியில் திரும்பத்தான் போகிறாய்! ஏனென்றால் பயணம் முடிந்த பிறகு யார்தான் இதுவரையில் திரும்பி வந்திருக்கிறார்கள்?"
ஞானி கூறிய தீர்க்கதரிசனம்தான் பலித்தது. நாடு திரும்பும்போது பாதி வழியிலேயே அலெக்சாண்டர் இறந்து போனார்.