ஒரு நாள் நண்பகல் நேரத்தில் ஓர் ஆந்தை ஒரு மரத்தின் மீது உட்கார்ந்திருந்தது. அப்போது திடீரென்று எங்கிருந்தோ ஓர் அன்னப்பறவை பறந்து வந்து ஆந்தையின் அருகில் உட்கார்ந்தது.
வெயிலில் பறந்து வந்த களைப்பினால் அது மிகவும் சோர்ந்து காணப்பட்டது.
அன்னம் தனக்குத் தானே, “அப்பா! என்ன வெயில்! இன்று சூரியன் மிகவும் கடுமையாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறான்!” என்று சொல்லிக் கொண்டே தன் சிறகுகளை விரித்துச் சோம்பல் முறித்தது.
அன்னம் கூறியதைக் காதில் வாங்கிக்கொண்ட ஆந்தை, "என்ன! சூரியனா? யார் அவன்? அவன் எங்கே இருக்கிறான்? இப்போது உஷ்ணமாக இருப்பதென்னவோ உண்மைதான்! ஆனால் இந்த வெப்பம் இருள் அதிகமாவதனால் அல்லவா ஏற்படுகிறது?'' என்று கூறியது.
ஆந்தையின் அறியாமை நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட அன்னம், பகல், இரவு என்ற சொற்களின் கருத்தை அதற்கு விளக்க முயன்றது.
அன்னம் ஆந்தையிடம், “சூரியன் ஆகாயத்தில் இருக்கிறான். அவனுடைய கிரணம் உலகில் பரவுகிறது. அப்போதுதான் வெயில் அதிகமாகி நாம் உஷ்ணத்தை உணர்கிறோம். சூரியனின் ஒளிதான் வெப்பம்'' என்று விளக்கமாகக் கூறியது.
அன்னத்தின் பதிலைக் கேட்ட ஆந்தைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அது உடனே அன்னத்திடம், "அடே! நீ என்ன புதிதாகச் சூரிய ஒளி என்ற வார்த்தையைத் தோற்றுவிக்கிறாய்? நீ நிலவு வெளிச்சத்தையும் சந்திரனையும் பற்றிக் கூறினால் என்னால் புரிந்து கொள்ள முடியும். இதோ பார்! உன்னைப் பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. யாரோ உன்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள்! சூரியன் என்றோ, சூரிய ஒளி என்றோ உலகில் எதுவும் கிடையாது. அதை நீ முதலில் தெரிந்து கொள்!'' என்று சொல்லியது.
அன்னம் எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சி செய்து ஆந்தைக்குப் புரிய வைக்க முயன்றதோ, அதைப் போலப் பல மடங்கு ஆந்தையின் பிடிவாதமும் வளர்ந்தது.
கடைசியாக ஆந்தை அன்னத்திடம், “இந்தச் சமயத்தில் எனக்குப் பறப்பது மிகவும் கஷ்டமாக இருந்தாலும் உன்னோடு பறந்து வருகிறேன். நீ என்னுடன் வா. இங்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் செல்வோம். அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அதில் என் இனத்தவர்கள் நூற்றுக்கணக்கில் வசிக்கிறார்கள். அவர்கள் மிகவும் சிறந்த அறிவாளிகள். அவர்களிடம் நம் வழக்கைத் தெரிவித்து நியாயம் கேட்போம்” என்று கூறியது.
அன்னமும் ஆந்தை கூறிய யோசனைக்கு ஒப்புக்கொண்டது. இரண்டும் பறந்து சென்று ஆலமரத்தை அடைந்தன.
தன் இனத்தவரைக் கண்டதும் ஆந்தை மிகவும் உற்சாகத்தோடு உரத்த குரலில், “இந்த அன்னம் சொல்வதைக் கேளுங்கள்! ஆகாயத்தில் சூரியன் என்று ஒன்று இருக்கிறதாம்! அந்தச் சூரியன் இப்போது ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறானாம். அதன் ஒளிதான் உலகில் பரவுகிறதாம்! அந்த ஒளிதான் வெப்பம் என்று இந்த அன்னம் ‘விளக்கம்' சொல்கிறது!'' என்று கூறியது.
அந்த ஆந்தை சொன்னதைக் கேட்டவுடன் அங்கிருந்த அத்தனை ஆந்தைகளும் வாய்விட்டுக் கடகடவென்று சிரித்தன. பிறகு ஒரே கூச்சல் இட்டுக்கொண்டு கத்த ஆரம்பித்தன. “என்ன பைத்தியக்காரத்தனம்! சூரியன் என்ற ஒன்று கிடையவே கிடையாது! அதைவிடவும் பெரிய பொய், சூரிய ஒளி என்பது. இந்த முட்டாள் அன்னத்தோடு சேர்ந்து நீயும் முட்டாளாகிவிடாதே!" என்று சொல்லிக் கொண்டே அவை அந்த ஆந்தையையும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டன.
அத்தோடு நில்லாமல் ஆந்தைகள் எல்லாமாக ஒன்று சேர்ந்து அன்னத்தை அடிக்கப் பறந்து வந்தன.
அந்த நேரம் பகற்பொழுதாக இருந்தும் ஆந்தைகள் வாழ்ந்த பகுதியில் மரங்களின் அடர்த்தி காரணமாகச் சூரிய ஒளியேத் தெரியவில்லை. ஆந்தைகளால் வெளியில் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. அன்னம் நிலைமையைப் புரிந்து கொண்டது. அது தப்பிப் பறந்து செல்ல அதிக நேரமாகவில்லை.
அன்னம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்து கொண்டே, “பொதுவாக அதிகப்பட்ச அபிப்பிராயத்தினால் மட்டுமே சத்தியம் அசத்தியம் ஆகிவிடாது. என்றாலும், ஆந்தைகளின் அபிப்பிராயம் அதிகமாக ஒப்புக்கொள்ளப்படும் இந்த இடத்தில் எந்த அறிவாளியாலும் உண்மையை நிரூபிக்க முடியாது'' என்று தனக்குத்தானேச் சொல்லிக் கொண்டது.
உலகில் பலர் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதனால், அதர்மத்தைத் தர்மமாக எடுத்துக் கொண்டு வாழக்கூடாது. சிலர் சொல்லும் கருத்து என்பதனால், மகான்களின் தார்மிகக் கருத்துக்களை நாம் புறக்கணித்துவிடக் கூடாது. சான்றோர் சிலராகவும் மூடர் பலராகவும் இருப்பது உலகின் இயல்பு. தண்ணீரைக் களைந்து பாலை ஏற்கும் அன்னம் போல், பொய்யை விலக்கி உண்மையைக் கைக்கொள்ள வேண்டும்.