திருமாலின் திருவுருவமே அழகானது. அத்தகைய அழகருக்கு அழகு செய்தது போல் அவரது திருமேனி முழுவதையும் முத்துக்களாலும் சிறந்த ரத்தினங்களாலும் மாணிக்க மணிகளாலும் செய்த ஆபரணங்களால் அலங்கரித்து, விலையுயர்ந்த பட்டாடைகளையும் அணிவித்து, வாசனை மிக்க மலர் மாலைகளையும் அணிவித்து, அவரது திருவுருவத்தின் திருவடிகளில் தன் சென்னியைத் தாழ்த்தி எழுந்து நின்று கண் இமைக்காமல் அந்தப் பேரெழிலைப் பருகி நின்றான் காஞ்சி மன்னன். அவனது மனம் " நான் செய்த பெரும் பேறுதான் என்ன! பகவான் விஷ்ணு என்னை மன்னனாக்கி என் மனம் முழுவதையும் பக்தியால் அல்லவா நிரப்பியிருக்கிறார்!'' என்று நினைத்து இறுமாந்திருந்தது.
காஞ்சி மன்னன், திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நிலையில் திருமாலின் விக்கிரகம் ஒன்றைச் செய்வித்தான். அதற்கு அவன் நாள்தோறும் பலவித அலங்காரங்களைச் செய்வித்து, சுவைமிக்க உண்டிகளையும் பழ வகைகளையும் படைத்து வந்தான். இத்தகைய சிறந்த வழிபாட்டிற்கு இணையாகச் சொல்லும் வகையில் இந்த உலகிலேயே எவரும் இருக்க முடியாது என்று செருக்குடன் அவன் அனைவரையும் நோக்குவது வழக்கம்.
இவ்விதம் இருந்தபோது ஒரு நாள் அரசன் உலாவச் சென்றான். அவன் திரும்பி வரும் வழியில் யாரோ ஒருவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்களில் நீர் மல்க, துளசி மாலையை அணிந்த ஒரு விக்கிரகத்திற்குத் துளசி தளங்களை அர்ச்சித்தபடி அமர்ந்திருந்தார்.
அரசன் விஷ்ணு பக்தன் அல்லவா? உடனே அங்கேயே நின்று அவரைக் கூப்பிட்டான். ‘’இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? விஷ்ணுவின் விக்கிரகத்தை நான் எவ்வளவு அழகாக அலங்கரித்திருக்கிறேன் என்று வந்து பார். அழகிய ஆடைகளால் அலங்கரிப்பதை விட்டு, வெறும் துளசிமாலையை மட்டும் சார்த்தி என் அண்ணலை அலங்கோலப்படுத்தி விட்டாயே!" என்றான்.
அரசன் செல்வச் செருக்குக் காரணமாகத் தன் வார்த்தைகளால் ஓர் ஏழைப் பக்தரான விஷ்ணுதாசரின் மனதை நூறு சுக்கல்களாக உடைத்து விட்டான். அரசன் எங்கே! அன்றாடங்காய்ச்சி எங்கே! மலைக்கும் மடுவுக்கும் எப்படிப் பொருந்தும்?
பகவானிடம் பக்தி செலுத்துவது ஒன்றையே முக்கியமாகக் கருதிய விஷ்ணுசித்தர், "அரசே! பகவானைப் பூஜிப்பதற்கு இதயத்தில் நிரம்பிவழியும் பக்தி என்ற மலரைவிடச் சிறந்தது வேறு ஒன்றும் கிடையாது. பொன்னும் மணியும் கொண்டு இறைவனை அளந்துவிட முடியாது. பகவானை உண்மையான பக்தி ஒன்றாலேயே அடைந்துவிடலாம். அத்தகைய பக்தி ஒன்றையே பிரார்த்தித்து நான் பகவானை வழிபட்டு வருகிறேன்'' என்று சொன்னார். பிறகு அவர் மீண்டும் தம்போக்கில் விஷ்ணுஸூக்தத்தைத் தமது தேன்மதுரக் குரலோடு இழைத்துப் பாடம் செய்வதில் முனைந்தார்.
இதைக் கேட்ட அரசன் வெகுண்டான். "அந்தணனே! உன் பக்தியின் மகிமையைப் பார்த்து விடுகிறேன்! நான் முதலில் பகவானைப் பார்க்கிறேனா, நீ முதலில் பார்க்கிறாயா என்பதைப் பார்த்து விடலாம்'' என்று சூளுரைத்தான். அந்தணர் எதையும் பொருட்படுத்தவில்லை. காஞ்சி மன்னனும் ஆத்திரத்துடன் அரண்மனையை அடைந்தான்.
சில நாட்கள் சென்றன. மன்னன் முத்கல மகரிஷியை வரவழைத்தான். பகவானைத் தரிசிப்பதற்காக மிகுந்த பொருட்செலவில் விஷ்ணு யாகத்தைத் தொடங்கினான். நகரின் அலங்காரமும், அந்தணர்களின் வேத ஒலியும், யாகத்தின் போது அளிக்கப்படும் தானங்களும் தட்சிணைகளும் அனைவரையும் காஞ்சியை நோக்கி ஈர்த்தன. எங்கே பார்த்தாலும் மக்கள் கூடி அரசனின் இத்தகைய சிறப்புமிக்க பக்தியையே பாராட்டிப் பேசினார்கள்.
இங்கு ஏழை அந்தணரும் 'க்ஷேத்திர சன்னியாசம்' என்ற ஒருவகைத் துறவை மேற்கொண்டார். அனந்தசயனத் தீர்த்தத்திலேயே அவர் தங்கி, பகவான் விஷ்ணுவை ஆராதித்து, விரதம், உபவாசம் ஆகிய அனுஷ்டானங்களைச் செய்து வந்தார். அவர் ஒரு சபதத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அதன்படி பகவானின் தரிசனம் கிடைத்தால் அன்றி அவர் காஞ்சி திரும்பக் கூடாது. அவர் தம் நிபந்தனை நிறைவேறும் வரை பகலில் ஒரு முறை தன் கையால் உணவு தயாரித்து அதைப் பகவானுக்குப் படைத்த பிறகு உண்டு வந்தார். ஒரு நாள் இவ்விதம் வழக்கம்போல் உணவு தயாரித்தார். அதைப் பகவானுக்குப் படைப்பதற்காக எடுத்துச்செல்ல வந்து பார்த்தால், தயாரிக்கப்பட்ட உணவைக் காணவில்லை!
இது போலவே ஒரு வாரம் உணவு தொடர்ந்து திருட்டுப் போயிற்று. மறு முறை உணவு தயாரிப்பதில் நேரத்தைச் செலவிட்டால் பகவானை வழிபடும் நேரம் குறைந்துவிடும் என்று கருதிப் பட்டினியாகவே விஷ்ணுசித்தர் பஜனை செய்யக் கிளம்பிவிடுவார். ஏழாவது நாள், இந்த உணவுத் திருட்டு எப்படி நடைபெறுகிறது என்பதைக் கண்டு பிடிக்கத் தீர்மானித்தார். எனவே உணவைத் தயாரித்த பின் அதை மூடிவைத்துவிட்டு ஒரு மறைவிடத்தில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.
அவர் உணவை வைத்துச் சென்றுவிட்டார் என்பதை நிச்சயம் செய்துகொண்டு அங்கே ஒரு சண்டாளன் வந்தான். அவன் வறுமையால் வாடுகிறான் என்பதை ஒரே வினாடியில் தெரிந்துகொள்ளலாம். ஒல்லியாக ஒடிந்து விழுவது போன்ற உடல். அழுக்கேறிய கிழிந்த கந்தல் உடை, பரட்டைத் தலை. சுற்று முற்றும் பார்த்த சண்டாளன் யாரும் இல்லை என்று நினைத்து, சமைத்த உணவை அள்ளிக் கொண்டு ஓடத் தலைப்பட்டான்.
இந்தக் காட்சியைக் கண்ட ஏழை விஷ்ணுசித்தரின் மனம் அனலில் இட்ட மெழுகுபோல் உருகியது. அவனிடம் இரக்கம் கொண்ட அந்தணர் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்யை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் ஓட ஆரம்பித்தார். பின்னால் தன்னைத் தொடர்ந்து வரும் ஆள் சப்தத்தைக் கேட்ட சண்டாளனும் வேகமாக ஓடத் தலைப்பட்டான். அவனால் ஓட முடியவில்லை. கல் தடுக்கிக் கீழே விழுந்து மூர்ச்சையடைந்தான். அந்தணரும் ஓடோடி வந்து, அவன் அருகே அமர்ந்து, தன் மேல்துண்டை எடுத்து விசிறி அவனை ஆசுவாசப்படுத்தினார்.
அவ்வளவுதான், “அப்பனே! உனக்கான தேர்வு முடிந்துவிட்டது. நீ வெற்றி பெற்றுவிட்டாய்!'' என்று கூறியபடி, சண்டாளன் இருந்த இடத்தில் சங்கு சக்கரக் கதை பீதாம்பரம் ஆகியவற்றோடு கூடிய திருமால் புன்னகையுடன் விஷ்ணு சித்தருக்குக் காட்சியளித்தார். திருமாலின் தரிசனம் கிடைத்த விஷ்ணுசித்தர் பேச்சற்றுப்போய் கல்லெனச் சமைந்து போனார். இத்தகைய நிலையில் அவர் விஷ்ணுவை நமஸ்கரிக்கவும் மறந்தார். பகவான் விஷ்ணுசித்தருக்குத் தன் தரிசனத்தையும் அளித்து விமானத்தில் ஏற்றி அவரை வைகுண்டம் அனுப்பி வைத்தார். தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர். கந்தர்வர்கள் பாடினர். அப்ஸரஸ் ஸ்திரீகள் ஆடினர்.
இங்கே விஷ்ணுயாகம் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று அரசன், "மகரிஷி! நிறுத்துங்கள் யாகத்தை!” என்று முழு மனதுடன் வேள்விக் காரியத்தில் ஈடுபட்டிருந்த முத்கல மகரிஷியின் கவனத்தைத் திருப்பினான். காரணம் என்ன? மன்னனின் கண்களில் விஷ்ணுதாசர் வைகுண்டம் செல்லும் விமானம் பட்டதுதான். பிறகென்ன? பக்தி தான் பகவானை அடையச் சிறந்த வழி'' என்பது மன்னனுக்குப் புலனாயிற்று. உடனே அவன் தன் அரச உடைகளைக் களைந்து வீசி எறிந்தான். பகவான் விஷ்ணுவை நினைத்துக் கண்ணீர்விட்டுக் கதறியபடியே யாககுண்டத்தில் எவரும் தடுக்கு முன் குதித்துவிட்டான். உடனே விஷ்ணுபகவான் அவனுக்கும் காட்சியளித்து வைகுண்டம் அழைத்துச் சென்றார்.
இந்தக்கதை பத்மபுராணத்தில், உத்தரகாண்டத்தில் பக்தியின் சிறப்பை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.