தர்மத்தின் திருவுருவமாக விளங்கிய தர்மபுத்திரருக்கும், தானத்தில் சிறந்து விளங்கிய கர்ணனுக்கும் ஈடாக உலகம் இதுவரையில் எவரையும் கண்டதில்லை. அப்படிப்பட்ட தர்மபுத்திரரே ஒரு தடவை நரகத்திற்குச் செல்லும்படி ஆயிற்று!
மகாபாரதப் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆசாரியர் துரோணர் பாண்டவர்களின் படையைச் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருந்தார். சிறந்த அஸ்திரங்களைப் பல தடவை பிரயோகித்தார். பாண்டவர்களைச் சேர்ந்த வீரர்கள் எவரேனும் அவர்முன் காணப்பட்டால் உடனே அவர்கள் இந்த உலக வாழ்வை முடித்துக் கொண்டார்கள். பாண்டவர் சேனை குழப்பும் காரணமாகச் சிதறிக் கிடந்தது. மகாரதிகள் எனப்பட்ட சிறந்த படைத்தலைவர்கள் கூட என்ன செய்வது என்ற சிந்தனையில் மூழ்கினர்.
துரோணர் தமது கையில் அஸ்திரங்களை வைத்துக் கொண்டு, அவரே அவற்றைப் பிரயோகம் செய்யும் வரையில் அவரை யாராலும் வெல்ல முடியாது. எனவே அவராக முன்வந்து அஸ்திரங்களைக் கீழே வைத்தாலன்றி அவரை வெல்லுவது என்பது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போன்றதாகும். இதை நினைத்தே அனைவரும் கலங்கினார்கள்.
அப்போது பாண்டவர்களின் துயர் துடைப்பதற்கே உருவெடுத்த கண்ணபிரான், அவர்களைத் தேற்றும் வகையில் ஒரு விஷயத்தை அவர்களுக்குக் கூறினார்-"யுத்தம் ஆரம்பிக்கும் போது துரோணர் கூறியதை நீங்கள் அனைவரும் மறந்து விட்டீர்களா? 'மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான யாராவது ஒருவர், ஏதாவது விரும்பத்தகாத ஒரு விஷயத்தைச் சொல்லக் கேட்டால், அப்போது நான் என் கையிலுள்ள அஸ்திரங்களைத் தூர எறிந்துவிட்டுத் தியானத்தில் ஆழ்ந்து விடுவேன்' என்று துரோணர் கூறியிருக்கிறார்'' என்று கண்ணபிரான் சொல்லி, பாண்டவருக்கு நினைவூட்டி, ஏதாவது ஒரு வழியைக் காணச் சொன்னார்.
கண்ணன் சொன்னதைக் கேட்டவுடனே எல்லோரும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தனர். கடைசியாகப் பீமசேனனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி பீமன் துரோணரின் மகன் அசுவத்தாமாவுடன் போரிடக் கிளம்பினான். சண்டையின் நடுவில் பீமன் கீழே குதித்தான். குதித்த அவன், நேரே அசுவத்தாமனின் தேருக்கு அடியில் தன் கதையைக் கொடுத்து ஒரு நெம்பு நெம்பினான். அவ்வளவுதான்! அசுவத்தாமா ரதத்தோடு கூட யுத்தக்களத்திலிருந்து வெகு தூரம் சென்று எங்கோ போய் விழுந்தான்.
உடனேயே பீமன் கௌரவர்களின் சேனையில் "அசுவத்தாமா' என்ற பெயருடைய ஒரு யானையை ஒரே அடியில் கொன்று போட்டான். யானை இறந்தவுடன் அவன் நேராகத் துரோணர் இருக்கும் இடத்திற்குச் சென்று, "அசுவத்தாமன் கொல்லப்பட்டான்! அசுவத்தாமன் கொல்லப்பட்டான்!?" என்று உரத்த குரலில் கூச்சல் போட்டான்.
துரோணரின் காதில் பீமன் போட்ட சப்தம் விழுந்தது. அவர் திடுக்கிட்டார். என்றாலும் அவர் பீமனின் வார்த்தையை நம்பத் தயாராக இல்லை. ஆகவே அவர் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காகத் தமது ரதத்தைத் தர்மபுத்திரர் இருக்கும் இடத்தை நோக்கிச் செலுத்தினார்.
துரோணரின் ரதம் நெருங்கி வருவதை மாயக்கண்ணன் பார்த்தார். யுதிஷ்டிரர் எங்காவது உண்மையைச் சொல்லிக் காரியத்தைக் கெடுத்து விட்டால் என்ன செய்வது என்று முன் எச்சரிக்கையோடு கண்ணபிரான், "தர்மரே! உங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், இதை விட்டால் வேறு வழி கிடையாது. எனவே துரோணாசாரியார் வந்து கேட்டால், 'அசுவத்தாமன் கொல்லப்பட்டான்' என்று தாங்கள் சொல்லத்தான் வேண்டும். நான் சொல்லுவதால் தாங்கள் இதைக் கூறியே ஆகவேண்டும்" என்று கட்டளை போட்டு விட்டார்.
பாவம், யுதிஷ்டிரருக்குத் தர்மசங்கடமாயிற்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர் பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் வார்த்தையைத் தட்டவும் அவரால் முடியவில்லை. துரோணர் தர்மரின் அருகில் வந்து விட்டார். அவர் தர்மபுத்திரரிடம், "யுதிஷ்டிரா! பீமன் சொல்வது உண்மைதானா'' என்று கேட்டும் விட்டார். தர்மர் மிகவும் சங்கடத்துடன், “அசுவத்தாமன் கொல்லப்பட்டான்!'' என்றார். இதைத் தவிர வேறு பொய் அவர் வாயிலிருந்து வந்ததே இல்லை.
தர்மபுத்திரர் அத்தோடு நிறுத்தவில்லை. அவர் மனச்சாட்சி உறுத்திப் படாதபாடு படுத்தியது. அவர் வாயிலிருந்து மேலும் ‘’மனிதனா, யானையா?'' என்ற வார்த்தைகள் வெளிவந்தன. ஆனால் இந்த வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வருவதற்கு முன்பாகவே, அதாவது ‘அசுவத்தாமன் கொல்லப்பட்டான்!" என்ற வார்த்தை வந்தவுடனே, ஸ்ரீகிருஷ்ண பகவான் ஒரு விநாடியும் தாமதிக்காமல் தமது பாஞ்சஜன்யம் என்ற சங்கைப் பலமாக ஊதி மீதி வார்த்தைகள் துரோணரின் காதில் விழாமல் தடுத்து விட்டார்!
துரோணர் தர்மபுத்திரரின் மீது வைத்திருந்த மகத்தான நம்பிக்கை காரணமாகத் தமது மகன் அசுவத்தாமன்தான் கொல்லப்பட்டான் என்று நினைத்து மிகவும் சோகத்துடன் கையிலிருந்த அஸ்திரங்களை விட்டெறிந்து விட்டார்.
சாதாரணமாக யுதிஷ்டிரரின் தேர் பூமியிலிருந்து எப்போதும் நான்கு அங்குல உயர்த்தில் தான் இருக்கும். மற்றத் தேர்களைப் போலத் தரையைத் தொடாது. ஆனால், கபடமாக இந்த ஒரு பொய்யைச் சொன்னாரோ இல்லையோ, அவரது தேரும் மற்றவர்களின் தேரைப் போலவே பூமியைத் தொட்டுக்கொண்டு ஓட ஆரம்பித்தது!
தமது உடலுடன் சொர்க்கம் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்ற தர்மபுத்திரர், அந்த ஒரே ஒரு பொய்யைச் சொன்னதனால் ஒரு தடவை நரகத்தைக் காண நேர்ந்தது.