சத்தியகாம ஜாபாலர் மிகவும் சிறந்த தபஸ்வி. அவரது குருகுலத்தில் மாணவர்கள் தங்கிப் படித்துச் சிறந்த ஞானத்தைப் பெற்று வந்தனர்.
அவ்விதம் பயில வந்த மாணவர்களில் உபகோசலன் என்ற ஒரு மாணவனும் இருந்தான். அவன் முறைப்படி ஆசிரமத்தில் வசித்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆசிரியருக்கும், அது போன்று அக்கினிகளுக்கும் (நெருப்பு என்ற தேவதைகள்) பணிவிடைகள் செய்து வந்தான். குருவையும் அக்கினிகளையும் வணங்கிப் பாடம் கேட்பது குருகுல சம்பிரதாயம். அதன்படி ஒழுங்காகப் படிக்கும் பிரம்மசாரிகளை ஆசிரியர் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அதே போல் ஜாபாலர் தம்மிடம் பயின்று வந்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த உபதேசங்களை வழங்கி அவர்களை அவரவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் உபகோசலனைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவனை வீட்டிற்கும் அனுப்பவில்லை.
சகமாணவர்கள் குருவிடம் உபதேசம் பெற்று வீடு திரும்பிச் சென்றதையும், தன் ஒருவனிடம் மட்டும் குருதேவர் அசட்டையாக இருந்து விட்டதையும் கண்டு உபகோசலனுக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. அவனது கவலை நிறைந்த நிலையைக் கண்டு குருபத்தினி அவன்மீது மிகவும் இரக்கம் கொண்டாள்.
அவள் கணவனிடம் சென்று, “சுவாமி! தங்களது செய்கை எனக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. உபகோசலனிடம் தாங்கள் அப்படி என்ன குறையைக் கண்டீர்கள்? அவனும் மற்ற மாணவர்களைப் போலத்தானே பிரம்மாச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்து வந்தான்; தங்களையும் அக்கினிகளையும் பக்தியோடு வணங்கித் துதித்து வந்தான். எனவே நீங்கள் இவனுக்கும் உபதேசமளித்து அவனுக்கு விடைகொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்விதம் செய்ய மறுத்தால் அவனது சேவையில் திருப்தியடைந்த அக்கினிகள் உங்களை மதிக்க மாட்டார்கள்.'' என்று கூறினாள்.
ஆனால் அவள் கூறியது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.
மனைவி கூறியதை முனிவர் காதில் வாங்கிக் கொள்ளாமலே எங்கோ யாத்திரை செல்லக் கிளம்பிவிட்டார்.
அதைக் கண்டதும் உபகோசலனின் வருத்தம் பின்னும் அதிகமாயிற்று. இதனால் அவன் உண்ணாநோன்பிருக்கத் தீர்மானித்தான்.
குருவின் மனைவி உபகோசலனை அணுகி, "குழந்தாய்! நீ ஏன் உணவு உட்கொள்ள மறுக்கிறாய்?'' என்று வினவினாள்.
உபகோசலன், "தாயே! என் மனம் மிகவும் கஷ்டப்படுகிறது. மனநிலை சரியில்லாமையினால் எனக்கு உணவு பிடிக்கவில்லை" என்றான்.
உபகோசலன் பட்டினி கிடப்பதைக் கண்ட அக்கினிகள் கவலை கொண்டனர். தங்களுக்குள் அவர்கள் கலந்து ஆலோசித்து, "இந்தப் பிரம்மசாரி நமக்குச் சிரத்தையுடன் முழுமனதுடன் சிறந்த முறையில் சேவை செய்துள்ளான். இவனுடைய சிறந்த தவத்திற்காக இவனுக்குச் சிறந்த உபதேசத்தைச் செய்து, இவனது மனக்கஷ்டத்தை நாம் போக்க வேண்டும்” எனத் தீர்மானித்தனர்.
அதன்படியே அவர்கள் தீர்க்கமாக ஆலோசித்து, முறைப்படி பிரம்ம வித்தையை அவனுக்கு உபதேசித்து, ஆசிவழங்கிவிட்டுச் சென்றனர்.
சிறிது நாட்கள் கழிந்ததும் குருதேவர் தமது யாத்திரையை முடித்துக்கொண்டு ஆசிரமம் திரும்பினார். தம் சீடரான உபகோசலனின் முகத்தில் பிரம்மதேஜஸ் வீசுவதைக் கண்டார். அவனருகில் சென்று, "குழந்தாய்! உன் முகத்தில் பிரம்மக்களை பிரகாசிக்கிறதே! உனக்கு யார் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தது? என்னிடம் கூறமாட்டாயா?' என்றார்.
உபகோசலனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இருப்பினும் மிகவும் மரியாதையுடன் குருவினிடம் நடந்த விஷயம் முழுவதையும் எடுத்துரைத்தான்.
அதைக் கேட்டு உளம் மகிழ்ந்த குருதேவர், "குழந்தாய்! அக்கினிகள் உனக்கு உபதேசித்து அப்படி ஒன்றும் மேலானது என்று கூறி விட முடியாது. நான் இப்போது உனக்கு அதைவிட மேலான பிரம்மதத்துவத்தை உபதேசிக்கப் போகிறேன். அதைக் கவனத்துடன் கேள். அதைச் சரிவரப் புரிந்து கொண்டால் பிரம்மதத்துவத்தை உணர்வாய். இப்படிப் பிரம்மதத்துவத்தை உணர்ந்த உயிர்களைப் பாவமும் தாபமும் தொட முடியாது. தாமரையிலை மேல் தண்ணீர் எவ்வாறு ஒட்டாமல் ஓடி விடுகிறதோ அதேபோல் வினைப்பயன்கள் அணுகாமல் விலகிச் சென்று விடும்" என்று கூறி, அவனுக்குப் பிரம்ம தத்துவம் எனப்படும் ரகஸ்யமான தத்துவத்தை உபதேசித்து விடை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.