பழங்காலத்தில் புகழ் பெற்ற சூதாடி ஒருவன் இருந்தான். சூதாடும் இழிதொழில் செய்து வந்த அவன் தேவர்களையும் அந்தணர்களையும் நிந்தித்து வந்தான். இதைத் தவிர அவன் உலகில் இருக்கும் மற்ற எல்லாவிதக் கெட்டபழக்கங்களும் கைவரப் பெற்றவனாக இருந்தான்.
ஒரு நாள் அவன் மிகவும் தந்திரத்துடன் சூதாட்டத்தில் அதிக அளவில் பொருளைப் பெற்றான். மனம் மிகவும் மகிழ்ச்சியடையவே தன் கையாலேயேத் தாம்பூலம் தயாரித்து எடுத்துக் கொண்டு, சந்தனம், மாலை போன்ற பொருள்களுடன் ஒரு விலைமாதின் வீட்டை நோக்கி வெகு விரைவாகச் சென்றுகொண்டிருந்தான்.
வழியில் கால் தள்ளாடிக் கொண்டே கீழே விழுந்து நினைவிழந்தான். நினைவு திரும்பியதும் அவன் தன் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தான். அவனுக்குத் தனது தீய வாழ்க்கையைக் குறித்து மிகவும் வருத்தம் உண்டாயிற்று. அதன் பயனாக வைராக்கியம் ஏற்பட்டது. பிறகு மனத்தெளிவு பெற்றுச் சுத்தமான மனதுடன் தன் கையிலிருந்த பொருள்கள் அனைத்தையும் அங்கிருந்த ஒரு சிவலிங்கத்திற்கு அர்ப்பணித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். அது ஒன்று மட்டும்தான் அவன் தனது வாழ்க்கையில் செய்த ஒரே ஒரு புண்ணியச் செயலாகும்.
காலம் தன் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. சூதாடியின் வாழ்க்கைப் பயணம் முடிந்தது. யமதூதர்கள் அவனை எமனுலகத்திற்கு அழைத்துச் சென்றனர். யமதர்ம ராஜன் அவனைப் பார்த்து, “முட்டாளே! நீ செய்துள்ள இழிசெயல்கள் காரணமாக நரகத்தில் மிகவும் கடுமையான வேதனைகளை நீ அனுபவிக்கத் தகுந்தவன்'' என்று கூறினான்.
அதைக் கேட்டு நடுநடுங்கிப் போன சூதாடி யமதர்மனைப் பார்த்து, ''சுவாமி! நான் ஏதாவது புண்ணியம்கூடச் செய்திருக்கக்கூடும் அல்லவா? தயவு செய்து அதன் பயனைப் பார்த்துத் தீர்ப்புக் கூறுங்கள்'' என்று வேண்டிக் கொண்டான்.
யமதர்மன் சித்திரகுப்தனைப் பார்த்தான்.
சித்திரகுப்தன், நீ இறப்பதற்கு முன் சிறிதளவு சந்தனத்தைச் சிவலிங்கத்திற்கு அளித்துள்ளாய். அதன் பலனாக நீ சுவர்க்கத்தின் அரியணையில் மூன்று நாழிகை நேரம் அரசனாக வீற்றிருக்கத் தகுந்தவனாகிறாய்.
சூதாடி:- அப்படியானால் எனக்கு முதலில் சுவர்க்கத்தில் நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிப்பதற்கு அனுமதி கொடுங்கள். பிறகு நரகத்தில் நான் படவேண்டிய அனைத்தையும் பட்டுக்கொள்கிறேன்.
உடனே யமதர்மனின் கட்டளைப்படிச் சூதாடி சுவர்க்கலோகத்திற்கு அனுப்பப்பட்டான். தேவகுருவான பிருகஸ்பதி இந்திரனை அழைத்து அவனுக்குப் பல வகையிலும் எடுத்துச் சொல்லி, மூன்று நாழிகை நேரம் அவனது அரியணையில் ஏறி அரசனாக இருக்க அந்த சூதாடிக்கு இடம் அளிக்க வேண்டும் என்று கூறினார். மூன்று நாழிகைக்குப் பிறகு இந்திரனை மறுபடியும் தன் அரச பதவியை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார்.
இந்திரன் அரியணையிலிருந்து இறங்கவே, சூதாடி தேவருலகிற்கு அதிபதியானான். இன்னும் மூன்று நாழிகை இருக்கிறதே! சூதாடி சிந்தித்தான். ‘சிவபெருமானைத் தவிர நமக்கு வேறு புகலிடம் கிடையாது' என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான். பொருளின் மீது இருந்த பற்றுதல் அவன் மனதிலிருந்து நழுவத் தொடங்கியது. உடனே தன் அதிகாரத்திற்கு உட்பட்ட பொருள்களைத் தானமளிக்கத் தொடங்கினான்.
சிவபெருமானின் பக்தனான அவன், தேவேந்திரனது மிகவும் புகழ் பெற்ற ஐராவதம் என்ற யானையை அகஸ்தியருக்கு அளித்தான். உச்சைச்ரவா என்ற குதிரையை விசுவாமித்திர முனிவருக்குக் கொடுத்தான். காமதேனு என்னும் பசுவை வசிஷ்ட மகரிஷிக்கு வழங்கினான். சிந்தாமணி என்னும் இரத்தினத்தை, காலவ மகரிஷிக்குக் கொடுத்தான். கல்ப விருக்ஷத்தைப் பறித்துக் கௌண்டின்ய முனிவருக்கு அளித்துவிட்டான். இவ்வாறாக அவன் மூன்று நாழிகை நேரம் ஆகும் வரையிலும் தானமளித்துக் கொண்டே இருந்தான். சுவர்க்கத்தில் இருந்த விலைமதிப்பற்ற பொருள்கள் எல்லாவற்றையும் தானமளித்து விட்டான். மூன்று நாழிகை முடிந்ததோ இல்லையோ, பேசாமல் அரியணையை விட்டு இறங்கிச் சென்று விட்டான்.
தேவேந்திரன் திரும்பி வந்து பார்த்த போது அமராவதி நகரமே செல்வம் குன்றிப் பொலிவிழந்து காணப்பட்டது. உடனே அவன் குலகுருவான பிருகஸ்பதியை அழைத்துக் கொண்டு யமதர்மராஜனிடம் சென்றான். மிகுந்த கோபத்துடன் யமதர்மனைப் பார்த்து, “தர்மராஜாவே, தாங்கள் என் பதவியை ஒரு சூதாடிக்கு அளித்து மிகவும் தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்கள்! அவன் அங்கே சென்று மிகவும் அடாத காரியங்களைச் செய்துவிட்டான். உண்மையாகவே அவன் என் விலையுயர்ந்த இரத்தினங்கள் அனைத்தையும் முனிவர்களுக்குத் தானமாக அளித்து விட்டான். வந்து அமராவதி நகரைப் பாருங்கள்! சூறையாடப்பட்டதைப் போன்று எவ்வளவு சூன்யமாகக் காணப்படுகிறது என்பதைத் தாங்களே தெரிந்து கொள்வீர்கள்” என்றான்.
யமதர்மன், “தேவேந்திரா! தங்களுக்கு வயது அதிகமானதனால் கிழவராகி விட்டீர்கள். ஆனாலும் தங்களுக்கு அரசாங்க விஷயமான பற்று இன்னும் விட்டுப் போகவில்லையே! சூதாடி செய்த செயலால் அவனுக்கு இப்போது கிடைத்திருக்கும் புண்ணியம் நீங்கள் செய்த நூற்றுக்கணக்கான வேள்விகளை விட அதிகமாகிவிட்டது. தன் வசம் மிகப்பெரிய அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட பின்பும் எவன் சிறிதளவும் கர்வம் ஏற்படாமல் நற்காரியங்கள் செய்வதில் ஈடுபடுகிறானோ அவனே மேலானவன். செல்லுங்கள். முனிவர்களுக்குத் தேவையான பொருளைக் கொடுத்தோ அல்லது அவர்களின் கால்களில் விழுந்தோ உங்கள் இரத்தினங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினான்.
இதைக் கேட்ட இந்திரன், 'மிகவும் நல்லது" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றான். சூதாடியோ தான் முன்பு செய்த பாவச் செயல்களின் பலனாக நரக வாழ்க்கை வாழ்வதினின்றும் விடுபட்டான். அத்துடன் மறுபிறவியில் அவன் மகா தபஸ்வியும் கொடையாளியுமான விரோசனனுக்குப் பலி என்ற பெயரில் மகனாகப் பிறந்தான்.