முன்னொரு காலத்தில் சித்திராதன் என்பவன் ஏராளமான செல்வத்துடன் பேரரசனாக விளங்கினான்.
பல நாட்டு அரசர்களும் அவனைப் பணிந்து அவன் கட்டளைப்படி நடந்து வந்தார்கள்.
நல்லவனான அவன் இதே போன்ற சிறப்பை அடுத்தப் பிறவியிலும் பெற வேண்டும் என்று நினைத்தான்.
பெருந்துறவியான வசிட்டரை வணங்கிய அவன், “நான் முற்பிறவியில் யாராக இருந்தேன்?” என்று கேட்டான்.
சிந்தனையில் ஆழ்ந்த அவர், “நீ முற்பிறப்பில் தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாய். விறகு வெட்டி வாழ்க்கை நடத்தினாய். ஒரு முறை விறகு விலை போகவில்லை. யாகம் செய்து கொண்டிருந்த அந்தணர்களுக்கு அதை இனாமாகக் கொடுத்தாய். நீ வரும் வழியில் வணிகன் ஒருவன் நிறைய செல்வத்தைத் தானமாகப் பிறருக்கு வழங்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த நீ, 'என்னிடமும் பொருள் இருந்தால் நானும் இப்படித் தானம் செய்வேனே!' என்று நினைத்தாய். அதே நினைப்பில் நீ இறந்துவிட்டாய். அந்த புண்ணியத்தால்தான் நீ இந்தப் பிறவியில் பேரரசனாகப் பிறந்தாய்" என்று சொன்னார்.
"மறுபிறவியிலும் இப்படியே நான் பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று பேரரசன் கேட்டான்.
"எப்போதும் தான தருமங்கள் செய்து கொண்டிரு" என்றார் அவர்.