ஓர் ஊரில் ரிபு என்ற முனிவர் ஒருவர் இருந்தார்.
அவருக்கு நிதாதர் என்பவர் சீடர்.
ஒரு சமயம் ரிபு முனிவர் வெளியே எங்கேயோச் சென்றார். பின்னர் ஆயிரம் வருடங்கள் கழித்துத் திரும்பி வந்தார்.
ஆயிரம் வருடங்கள் கழித்து ரிபு முனிவர் திரும்பி வந்ததால், சீடர் நிதாதருக்குத் தன் குருவை அடையாளம் தெரியவில்லை.
அதனால் அவர், 'யாரோ ஒரு பெரிய முனிவர் வந்திருக்கிறார்!" என்று நினைத்தார்.
''எனக்குப் பசியாக இருக்கிறது... சாப்பாடு போடு” என்றார் முனிவர்.
உடனே நிதாதர் தன் மனைவியிடம் கூறி ருசியாகச் சமைக்கச் சொன்னார்.
சமையல் தயாரானதும் முனிவரைச் சாப்பிடச் செய்தார்.
முனிவர் சாப்பிட்டு முடித்ததும், ''என்ன... திருப்தியாகச் சாப்பிட்டீர்களா?" என்று நிதாதர் கேட்டார்.
முனிவர் நிமிர்ந்து பார்த்து, ''நான் எங்கேச் சாப்பிட்டேன்? எவனுக்குப் பசியோ அவன்தான் சாப்பிடுவான். அவனுக்குத் தானே திருப்தி ஏற்படும்'' என்று வினவினார்.
சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. குழம்பிப் போய் நின்றார். பரிதாபமாக முனிவரைப் பார்த்தார்.
முனிவர், "இப்போது சாப்பிட்டது நான் இல்லை! என் உடல்தான் சாப்பிட்டது! அதனால் உடலுக்குத்தான் திருப்தியோ அதிருப்தியோ ஏற்படும். நான் ஆன்மா. எனக்கு அதில் திருப்தியோ அதிருப்தியோ இல்லை" என்றார்.
உடனே அந்தச் சீடருக்கு, 'இவர்தான் நம் குரு ரிபு!' என்ற உண்மை புரிந்துவிட்டது.
அவர் குருவின் காலில் விழுந்து வணங்கினார்.
அதன் பிறகு மீண்டும் அந்த குரு வெளியே கிளம்பிச் சென்று, ஆயிரம் வருடங்கள் கழித்து திரும்ப ஊருக்குள் வந்து கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் நிதாதர், தர்ப்பைப் புல் மூட்டையைத் தன் தலையில் வைத்துக் கொண்டு தெரு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த முனிவர் தன் சிடர் அருகில் சென்றார்.
இப்போதும் அந்தச் சீடருக்குத் தன் குருவை அடையாளம் தெரியவில்லை.
“ஏன் இப்படி தெரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறாய்?' என்று முனிவர் கேட்டார்.
''ராஜா யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருக்கிறார். அதைத்தான் இப்படி ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று சீடர் பதிலளித்தார்.
அதற்கு முனிவர், “அது சரி.. அதில் யார் ராஜா? எது யானை?'' என்று வினவினார்.
சீடர் ஆச்சரியத்துடன் முனிவரைத் திரும்பிப் பார்த்து, ''அதாவது, மேலே இருக்கிறாரே அவர்தான் ராஜா! கீழே இருக்கிறதே அதுதான் யானை!'' என்று விளக்கம் கூறினார்.
“அது சரி .... 'மேலே' என்று சொல்கிறாயே, அப்படியென்றால் என்ன? 'கீழே' என்று சொல்கிறாயே, அப்படியென்றால் என்ன?'' என்று கேட்டார் முனிவர்.
அதைக் கேட்டதும் சீடருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா?
அப்படியே ஒரே தாவாகத் தாவி அந்த முனிவரின் தோள் மீது சென்று உட்கார்ந்து கொண்டு, "மேலே என்றால் என்ன? கீழே என்றால் என்ன?' என்றுதானே கேட்டீர்கள்? இதோ நான் மேலே இருக்கிறேன். நீங்கள் கீழே இருக்கிறீர்கள்!'' என்றார்.
முனிவர் அப்போதும் விடவில்லை. அடுத்தக் கேள்வியைக் கேட்டார்:
“அது சரி... நான் மேலே நீ கீழே என்று சொல்கிறாயே நான் யார்? நீ யார்? என்று வினவினார்.
உடனே சீடர், தன் குருதான் வந்திருக்கிறார்!' என்று புரிந்து கொண்டார். குருவின் காலில் விழுந்து வணங்கினார்.