ஒரு மருத்துவமனை. அதன் ஓர் அறையில் இரண்டு நோயாளிகளின் கட்டில்கள்.
அறையின் நடுவில் இருந்த கட்டிலிலிருந்த நோயாளியின் கால் அகற்றப்பட வேண்டிய பரிதாப நிலை.
குடும்பம், வேலை, பார்த்த இடங்கள் பற்றியெல்லாம் இரண்டு நோயாளிகளும் மனம் விட்டுப் பேசுவார்கள்.
இவ்வாறாக நாட்கள் நகர்ந்தன. அவர்களது நட்பும் வளர்ந்தது.
ஜன்னல் அருகே இருந்தவன், தான் வெளியே பார்ப்பதைப் பற்றித் தனது நண்பனிடம் சுவாரசியமாகக் கூறுவான்.
அடுத்தவன், கண்ணை மூடியவாறு அதைக் கேட்டுக் கற்பனையில் மிதப்பான். காண முடியாததைக் கண்டுவிட்டதைப் போல மகிழ்வான்.
ஜன்னல் அருகே இருந்தவன், ஒரு நாள் வெளியே உள்ள தோட்டம், குளம், பறவைகள், விளையாடும் குழந்தைகள், படகு இவற்றைப் பற்றிக் கூறினான்.
இன்னொரு நாள் வானவில், வண்ணத்துப் பூச்சிகள், பூக்களை வர்ணித்தான்.
ஆஹா, உலகம் எவ்வளவு சிறந்ததாக உள்ளது என்று குதூகலித்தான் அறையின் நடுவில் படுத்திருந்த நோயாளி. இப்படிப் பல நாட்கள் சென்றன.
படுத்திருந்த நோயாளி, படுத்துக் கிடக்கும் அலுப்புத் தெரியாமல், தானும் உலகின் இயக்கத்தில் ஒருவனாய் நடமாடுவதாக உணரத் தொடங்கினான்.
ஒரு நாள் ஜன்னல் அருகே இருந்தவன் இறந்து போனான்.
அவனது உடலை அப்புறப்படுத்தியவுடன், படுத்திருந்த நோயாளி வெளியுலகைப் பார்க்க மிகுந்த ஆவல் கொண்டான்.
அதனால் அவன் மருத்துவரிடம் ஜன்னலை ஒட்டிய கட்டிலுக்குத் தன்னை மாற்றுமாறு வேண்டினான்.
மருத்துவரும் அவனது ஆசையைத் தீர்த்துவைத்தார். தான் இதுவரை தன் நண்பன் மூலமாகப் பார்த்து வந்ததை நேரில் பார்க்க, ஆவலுடன் வெளியே எட்டிப் பார்த்தான் அவன்.
அங்கே அவனுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அங்கு ஒரு நெடிய வெள்ளைச் சுவர் மட்டுமே இருந்தது. வேறு எதுவுமே இல்லை. உடனே, நர்ஸை அழைத்து விளக்கம் கேட்டான் அவன்.
நர்ஸ் அமைதியாக, “இறந்த உன் நண்பன் இந்தச் சுவற்றைக் கூடப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அவன் ஒரு பிறவிக் குருடன். அவன் உன்னை சந்தோஷப்படுத்தத்தான் அப்படிப் பேசியிருப்பான்" என்றாள்.