ஒரு யூதக் கோயில். அது யூதர்களின் மடமாகவும் இருந்தது. அங்கே ஒரு தலைமை குரு. அவர் மிகவும் கண்டிப்பானவர். அக்கோவிலை ஒட்டி ஒரு தோட்டம்.
ஒரு நாள் காலையிலே அந்தத் தோட்டத்திலே இரண்டு இளம் யூதர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் அவர்கள் அத்தோட்டத்தில் நடக்க அனுமதி உண்டு.
மற்ற நேரங்களிலே அவர்கள் மத நூல்களைப் படிக்க வேண்டும். பிற விதி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அவ்விருவருமே தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால், கோயில் மடத்தில் இருப்பதால் அவர்கள் புகைப்பிடிக்க முடியாது. அங்கு புகைப்பிடிப்பது கடுமையான குற்றம்.
“சரி... நாம் தோட்டத்தில் இருக்கும் போதாவது புகைப்பிடிக்கலாமா?" என்று ஓர் ஆசை இருவருக்கும்!
இருந்தாலும் பயம்! புகைப்பிடிப்பதைப் பற்றிக் கேட்டால் குரு என்ன கூறுவாரோ? இப்படிச் சிறிது காலம் சென்றது.
ஒரு நாள் அந்த இருவரில் ஒருவர் மிகவும் கலங்கிப் போய் அந்தக் கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.
வந்தவர் நேராகத் தோட்டத்துப் பக்கம் சென்றார். அங்கே இன்னொருவர் ஆனந்தமாகப் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் இவருக்கு அதிர்ச்சி!
“அடக் கடவுளே! என்ன இது? நீ குருவைக் கேட்காமலே ஆரம்பித்துவிட்டாயா?" என்றார்.
“இல்லை, நான் அவரிடம் கேட்டுத்தான் ஆரம்பித்தேன்" என்றார் அவர்.
“அப்படியா? என்ன மனிதர் இவர். நானும்தான் கேட்டேன். என்னைக் கண்டபடி திட்டி, ‘இது என்ன கோயிலா? நரகமா?’ எனத் திட்டினார். அது சரி, உன்னை மட்டும் எப்படி அனுமதித்தார்!" என்று கேட்டார் இவர்.
அவர் சிரித்துக் கொண்டே, “நீ எப்படிக் கேட்டாய், சொல்."
நாம் இந்தத் தோட்டத்திற்கு வருவது ஜபம் செய்வதற்குத்தானே. அதனால் நான் ‘ஜபிக்கும்போது புகைப்பிடிக்கலாமா?’ என்று அமைதியாகக் கேட்டேன்.
“அதற்கு அவர் சத்தம் போட்டு என்னை அடிக்கவே வந்துவிட்டார்!"
உடனே இவர், நீ ஒரு மாதிரியாகக் கேட்டிருக்கிறாய். நான் வேறு மாதிரியாகக் கேட்டேன். ‘ஜபம் செய்யும் போது புகைப்பிடிக்கலாமா?’ என்று நீ கேட்டாய். ‘குருவே, புகைப்பிடிக்கும் போது ஜபிக்கலாமா?’ என்று நான் கேட்டேன். ‘அதில் தவறேதுமில்லை மகனே’ என்று குரு பதில் சொன்னார்" என்றார்.
ஒரு சிறிய மாற்றம்தான், அது பெரிய மாறுதலை ஏற்படுத்திவிட்டது.
மனம் நல்ல விதமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இல்லை.