ஓர் ஊரில் ஒரு கொடுங்கோல் மன்னன் இருந்தான். மக்களுக்கு நிறையத் தொந்தரவுகள் கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஒருமுறை தவறு ஏதும் செய்யாத இளைஞன் ஒருவனைப் பிடித்து சிறையில் அடைத்துவிட்டான்.
அந்த இளைஞனின் சொந்தக்காரர்களெல்லாம் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள். ‘அவன் ஒரு தவறும் செய்யவில்லை. அவனை விடுதலை செய்யுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்.
மன்னன் யோசித்தான். அந்த இளைஞனை அழைத்து வரச் சொன்னான். அவன் கொண்டு வரப்பட்டான்.
‘இதோ பாரப்பா! உன்னை நான் விடுதலை செய்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. அதை நிறைவேற்றினால்தான் விடுதலை’ என்றான்.
இளைஞன் ஒத்துக் கொண்டான்.
மன்னன் நிபந்தனையைச் சொன்னான்: உன்னிடம் ஒரு செம்மறி ஆட்டைக் கொடுக்கப் போகிறேன். ஒரு மாதத்திற்கு அதற்குத் தேவையான தீனியும் கொடுக்கப்படும். ஒரு மாதம் கழித்து அந்த ஆட்டை எடை போட்டுப் பார்ப்பேன். எடை கூடியிருக்கக் கூடாது. எடை கூடினால் உனக்கு விடுதலை கிடையாது’.
இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. பயமாகப் போய்விட்டது. குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தான்.
“ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நன்றாக யோசித்து நாளைக்கு உன் முடிவைச் சொல்" என்றான் மன்னன்.
பையன் கவலையுடன் இருந்தான்.
அங்கே ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர் ரகசியமாக காதோடு காதாக ஒரு வழி சொல்லிக் கொடுத்தார்.
அதைக் கேட்டதும் இளைஞன் மறுபடியும் மன்னனிடம், “உங்கள் நிபந்தனையை ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.
ஓர் ஆட்டுக்குட்டி, ஒரு மாதத்திற்கான தீவனம் இவற்றைக் கொடுக்கும்படி மன்னன் உத்தரவிட்டான். இளைஞன் ஆட்டுக்குட்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
ஒரு மாதம், நாள் தவறாமல் ஆட்டிற்குத் தீவனம் வைத்தான். ஒரு மாதம் கழித்து அதை அரண்மனைக்கு ஓட்டிச் சென்றான்.
மன்னன் அதை எடை போட்டுப் பார்த்தான். எடை கூடவில்லை! அப்படியே இருந்தது. உடனே நிபந்தனைப்படி இளைஞனை விடுதலை செய்துவிட்டான்.
ஆடு எடை கூடாமல் இருப்பதற்கு அந்தப் பெரியவர் கூறிய யோசனை என்ன?
அந்த ஆட்டிற்கு எதிரில் அதன் கண்ணில் படும்படி ஓர் ஓநாயைக் கட்டிப் போடச் சொன்னார், அவ்வளவுதான்.