நீதிதேவனின் சபை. அங்கு ஒருமுறை பாம்பு, கீரி, நரி, பூரான், தேள் ஆகியவை சென்று அவரிடம் முறையிட்டன.
“வாருங்கள், உங்கள் பிரச்னை என்ன?" நீதிதேவன் கேட்டார்.
“நீதிதேவா, மக்கள் காடுகளையெல்லாம் அழித்து கட்டிடங்களாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் காட்டை அழிக்கும் போதும் ஏற்கனவே அந்த இடத்தில் குடியிருந்த நாங்கள் புது இடம் தேடி ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கட்டிடம் கட்டும் போதும் எங்களைக் கொன்று வருகிறார்கள். நாங்கள் என்னதான் செய்வது?" என்று புலம்பின.
“ஏன், உங்களுக்குக் குறைவான இடங்கள் போதுமே. பெரிதாக எந்தவிதமான வசதிகளும் தேவையில்லையே. எங்கு வேண்டுமானாலும் நீங்கள் வசிக்கலாமே?" என்றார் நீதிதேவன்.
“பிரச்னை அதுவல்ல நீதிதேவா, பல காலமாக எங்களை மனிதர்கள் திட்டமிட்டே ஒழித்து வருகிறார்கள்" என்று ஐந்தும் ஒரே குரலில் கூறின.
நீதிதேவன் சிற்றுயிர்களிடம் இரக்கம் கொண்டார்.
அதனால் அவர் யோசித்தவாறே, “குழந்தைகளே, நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருகிறது. மக்கள் தங்குவதற்கு இடப்பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது. அதனால் நீங்கள் ஒரேயடியாகக் காட்டிற்குப் போவதுதான் நல்லது" என்றார்.
உடனே கோபக்காரப் பாம்பு, “இல்லை நீதிதேவா, என் மனைவி ஓர் இடத்தில் மூன்று குட்டிகளை ஈன்றிருந்தாள். அங்கு வீடு கட்டியவர்கள் அவளையும் என் குட்டிகளையும் கொன்று விட்டார்கள். இனியும் அப்படி நடக்கவிடக் கூடாது" என்று அழுதபடி கூறியது.
“ஆம், நம் இனம் பூண்டோடு அழியும் அபாயமுள்ளது. மனிதர்களை எதிர்த்து எங்களால் போராட முடியாது. நாங்கள் என்ன செய்வது? எங்கள் இனத்தின் கௌரவம், எங்களது பாரம்பரிய குணங்கள் போற்றப்பட வேண்டும். அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்" என்று பாம்போடு கீரியும் சேர்ந்து கூறியது!
“நாங்கள் செத்தாலும் பரவாயில்லை. எங்களது பரம்பரைப் பண்புகள் நிலைத்து நிற்க வேண்டும். அதற்கு நீங்கள் வழிகாட்டுங்கள்" என்று நரியும் கூறியது.
தேளும் பூரானும் மெதுவாக, “இது நல்ல யோசனை. எங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒளிந்து கொள்கிறோம். ஆனால் எங்களது குணங்கள் ஒழிந்துவிடக் கூடாது" என்றன.
நீதிதேவன் சிறிது யோசித்துவிட்டு, “உங்கள் கோரிக்கை சரியே. மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்த முடியாது. அதே சமயம் உங்கள் குலப் பெருமைகளும் காப்பாற்றப்பட வேண்டும். அதுதானே உங்கள் விருப்பம்?" என்று கேட்டார்.
அதற்கு அனைத்தும் சம்மதித்தன.
“சரி, இனிமேல் மனிதர்கள் கட்டும் கட்டிடங்கள் சமுதாயத்திற்கும் தனிமனிதனுக்கும் நன்மை செய்தால், அந்த இடத்திலிருந்து நீங்கள் போய்விட வேண்டியதுதான். அங்கு உங்களுக்கோ, உங்கள் குணங்களுக்கோ இடமில்லை. ஆனால், கட்டிடத்தின் சொந்தக்காரர்களும் அதில் வசிப்பவர்களும் சமூக நலத்திற்கு எதிரான காரியங்களைச் செய்தால், நீங்கள் உடல் ரீதியாக அந்த இடத்திலிருந்து போக வேண்டியதுதான். ஆனாலும் அவர்களின் மனங்களில் உங்கள் பரம்பரைக் குணங்கள் நீங்காது இடம் பெறும். அங்கு வசிப்பவர்கள் தங்களுக்குள் பூசல், பொறாமை, தந்திரம் போன்ற தீய குணங்களோடு இருப்பார்கள். இது மனிதர்களுக்கு என் சாபம். உங்களுக்கு என் ஆசீர்வாதம்" என்றார்.
நீதிதேவனின் தீர்ப்பால் ஐந்து விலங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. தாங்கள் இல்லையென்றாலும் தங்களது குணங்கள் பாதுகாக்கப்பட்டதை நினைத்து அவைகள் சந்தோஷமாகச் சென்றன.