அவர் ஒரு துறவி. தையல் தொழில் செய்து வந்தார்.
அவரை ஒரு நாள் அந்த நாட்டு அரசர் சந்தித்தார். துறவியால் கவரப்பட்டு அரசர் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கக் கத்திரிக்கோல் ஒன்றை அவருக்குப் பரிசளித்தார்.
ஆனால் துறவி அதை வாங்க மறுத்துவிட்டார்.
துறவிக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்ற கவலையில் அரசர் அவரிடம், “உங்களுக்கு நான் என்ன கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்?" என்று கேட்டார்.
அதற்குத் துறவி, “ஒரே ஓர் ஊசி இருந்தால் கொடுங்கள்!" என்றார்.
உடனடியாக ஓர் ஊசியை வரவழைத்துக் கொடுத்துவிட்டு அரசர் பணிவாக நின்றார்.
துறவி, “நான் கத்தரிக்கோலை வேண்டாம் என்றதற்குக் காரணம், அது வெட்டும், பிரிக்கும். ஆனால் ஊசியோ தைக்கும், இணைக்கும். மனிதக் குலத்திற்குத் தேவை ஊசிதான். கத்தரிக்கோல் அல்ல!" என்றார்.
இன்றும் அந்த சுஃபித் துறவி சொன்னது அப்படியே பொருந்தும். ஊசி செய்யும் பணிகளைப் போன்றவைதான் இன்று நம் நாட்டிற்கு மிகவும் தேவை.