பணக்காரர் ஒருவர் தன் மகனைக் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். ஏழைகளின் துன்பத்தை மகனுக்குக் காண்பிப்பதே அவரது நோக்கம்.
இருவரும் அவர்களுக்குச் சொந்தமான பண்ணையில் சில நாட்கள் தங்கினர். அந்தப் பண்ணையில் வேலையாட்கள் அனைவரும் கடுமையாக உழைப்பதை மகனுக்குக் காட்டினார் அப்பா.
இதனால் அவனுக்கு ஆடம்பரமான வாழ்க்கை மீதுள்ள பிடிப்பு அதிகரிக்கும் என்றும் அதை அவனுக்கு வழங்கிய பெற்றோர்கள் மீது அன்பு காட்டுவான் என்றும் அவர் கணக்கிட்டார்.
பயணம் முடிந்து இருவரும் ஊருக்குத் திரும்பினார்கள். அப்பா மகனிடம், “பயணம் எப்படி? ஏழைகளைப் பற்றி அறிந்து கொண்டாயா?" என்று கேட்டார்.
அதற்குப் பையன், “ஆம்" என்று பதில் கூறினான்.
“என்ன அறிந்து கொண்டாய்?" - அப்பா.
சிறுவனும் தான் புரிந்து கொண்டதைச் சொல்ல ஆரம்பித்தான்:
அப்பா, “நம் தோட்டத்தில் மிகச் சிறிய நீச்சல்குளம்தான் உள்ளது. அவர்கள் தினமும் குளிக்கும் ஓடையோ, ஒரு முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது!
வெளிநாட்டு மின்விளக்குகளைக் கொண்டு நமது வீட்டை அலங்கரித்துள்ளோம். அவர்களோ விண்மீன்களை அல்லவா விலைக்கு வாங்கிவிட்டனர்.
நம் வீட்டின் முகடு முற்றத்துடன் முடிந்து போகிறது. நமக்குச் சொந்தமான சிறு நிலத்தில் வீடு கட்டிக் குடியிருக்கிறோம். ஆனால் அவர்கள் திசைகளை அல்லவா வளைத்துப் போட்டுள்ளனர்.
நம்மைக் கவனித்துக் கொள்ள வேலைக்காரர்கள் உள்ளனர். அவர்களோ மற்றவர்களுக்குச் சேவை செய்கிறார்கள். நாம் உணவை விலைக்கு வாங்குகிறோம், அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வீட்டைச் சுற்றி உயர்ந்த சுவர்களை எழுப்பிக்கொண்டு நிம்மதி இல்லாமல் வாழ்கிறோம். ஆனால் அவர்களோ, உதவுவதற்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் செல்கிறார்கள்"
கள்ளங்கபடமில்லாமல் பிள்ளை பேசிக் கொண்டேப் போவதைக் கேட்ட தந்தை மெய்சிலிர்த்துப் போனார்.
அவர் இத்தனை காலமும் தாம் கவனிக்கத் தவறியதை மகன் கண்டு கொண்டான் என்பதைப் புரிந்து கொண்டார். என்ன சொல்வதென்று அவருக்குப் புரியவில்லை.
கடைசியில் சிறுவன் முத்தாய்ப்பாக, “அப்பா! கிராமத்திற்குப் போய் வந்த பிறகு நாம் பரம ஏழைகள் என்று எனக்குக் காட்டியதற்கு மிகவும் நன்றி" என்றான்.