இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம்.
ஜெர்மன் நாட்டில் ரகசிய போலீஸ்காரர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றனர்.
அங்கு மூன்று குடியானவர்களுடைய வீட்டைச் சோதனையிட்டனர்.
அப்போது முதல் குடியானவனிடம் அவர்கள், நீ உனது கோழிகளுக்கு என்ன உணவு போடுகிறாய்?" என்று கேட்டனர்.
“அரிசி" என்றான் குடியானவன்.
“அரிசியா? மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் சாகும் போது, நீ அரிசியையா கோழிகளுக்குப் போடுகிறாய்? தப்பு, உன்னைக் கைது செய்கிறோம்" என்று அவனுக்கு விலங்கிட்டனர்.
இரண்டாவது குடியானவனிடம், “நீ கோழிகளுக்கு என்ன போடுகிறாய்?" என்று அதட்டினர்.
அவன் பயந்து போய், “சோளம்" என்றான்.
“சோளமா போடுகிறாய், முட்டாளே! சோளம் ஜனங்களின் உணவாச்சே? உன்னையும் கைது செய்கிறோம்" என்று கூறினர்.
மூன்றாவது குடியானவனைப் பார்த்து, “நீ என்ன போடுகிறாய்?" என்று போலீஸ்காரர்கள் கேட்டனர்.
முதல் இரண்டு பேருக்கும் நேர்ந்த கதியைப் பார்த்த அவன் யோசித்து, “நான் உணவு எதுவும் தருவதில்லை. பணத்தைக் கையில் கொடுத்து விடுகிறேன். கோழிகள் தங்களுக்கு விருப்பமான தீனியைத் தாங்களே வாங்கிச் சாப்பிட்டு விடும்" என்று பதில் அளித்தான்.