ஸ்ரீமத் பாகவதத்தை உபந்யாசகர் ஒருவர் அரச சபையில் சுவைபடக் கூறிக் கொண்டிருந்தார்.
அன்று கஜேந்திர மோட்சம் பற்றிய கதை. முதலை, யானையின் காலைப் பிடித்ததும், யானை ‘ஆதிமூலமே’ என ஸ்ரீமந்நாராயணனை அழைத்ததை விளக்கினார்.
உடனே அரசர், ‘‘பண்டிதரே, யானை அழைத்ததும் திருமகளிடம் கூடக் கூறாமல் பெருமாள் உதவிக்கு ஓடினார் என்றால், வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? கூறுங்கள்?’’ என்று கேட்டார்.
பண்டிதர் விடை தெரியாமல் விழித்தார். அரசர் சபையில் இருந்த அறிஞர்களைக் கேட்டார். அவர்களும் விழித்தனர்.
அப்போது அரசருக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தவன், ‘‘அரசே, நான் கூறட்டுமா?’’ என்று அனுமதி கேட்டான்.
‘‘அரசே, எனக்குத் தெரிந்தவரை வைகுண்டம் என்பது ஒரு யானை கூப்பிடும் தூரத்தில்தான் உள்ளது’’ என்றான்.
அரசன் உண்மையை உணர்ந்தான்.
‘‘உண்மைதான். எப்படி குழந்தையின் அழுகுரல் தாய்க்குக் கேட்கிறதோ, அதேபோல் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்குத் தன் குழந்தைகள் துயரால் அல்லது அன்பால் கூப்பிடும் குரல் நிச்சயம் கேட்கும்’’ என்று கூறிக் காவலாளிக்குப் பரிசு வழங்கிச் சிறப்பித்தான்.