போதி மரத்தின் கீழ் சித்தார்த்தர் தவம் செய்து வந்த காலம்.
ஒரு நாள் குளத்தில் குளித்த பின், அதிலிருந்த அழகிய தாமரைப் பூவில் ஒன்றைக் கொய்து, அதன் அழகை ரசித்தார்.
அவர் பூவைக் கொய்ததும் வானிலிருந்து அசரீரி ஒன்று கேட்டது:
‘‘சித்தார்த்தா! அந்தப் பூ என்ன தவறு செய்தது? அதனை அதன் கொடியிலிருந்து பிரித்து அதன் உயிரைப் பறிக்கும் உரிமை உனக்கில்லை’’
சித்தார்த்தர் உடனே பறித்த பூவை, குளத்திலேயே விட்டுவிட்டு வருந்தியபடிக் கரையேறினார்.
அப்போது ஒரு வேடன் வந்து அதேக் குளத்தில் இறங்கினான்.
கைகால் கழுவிக் கொண்டு அங்கிருந்த சில தாமரைக் கொடிகளை வேரொடு பிடுங்கிக் கரையில் வீசியெறிந்துவிட்டுச் சென்றுவிட்டான்.
இதைக் கவனித்த சித்தார்த்தர், ‘நான் ஒரு மலரைப் பறித்ததே பெரிய தவறு எனப்பட்டது! இந்த வேடன் பல கொடிகளை வேரோடுப் பிடுங்கி எறிந்தானே. அவனை இந்த அசரீரி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் விட்டுவிட்டதே! எனக்கு ஒரு நியாயம். அவனுக்கு ஒரு நியாயமா?’ என எண்ணினார்.
அப்போது அசரீரி கூறியது:
‘‘சித்தார்த்தா, அவன் ஒரு வேடன். நீ ஒரு ஞானி. உன் போன்றவர்கள் செய்யும் செயல்களை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஒரு பாமரன் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் முட்டாள்தனமான காரியங்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.
‘‘ஆனால், உன் போன்ற தவசீலர்கள் சுய நலத்திற்காகவோ, உலக நலத்திற்கு என்றால் கூட தவறான எண்ணத்தோடு எதுவும் செய்துவிடக் கூடாது.
‘‘ஒவ்வொரு விஷயத்திலும் ஞானிகள் உதாரணப் புருஷர்களாக விளங்க வேண்டும்.’’
சித்தார்த்தருக்குத் தெளிவு பிறந்தது. இனிமேல் இது போன்ற தவறுகள் செய்யக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டார்.