முன்னொரு காலத்தில் ஒரு மகான் இருந்தார். அவரை யார் என்ன திட்டினாலும் அவருக்குக் கோபம் வராது.
ஒரு நாள் அவர் வெளியில் சென்றுவிட்டுத் தம் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் ஒரு துஷ்டன் அவரைக் கன்னா பின்னாவென்று திட்டிக் கொண்டே அவர் பின்னால் வந்து கொண்டிருந்தான்.
மகான் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே நடந்தார்.
அவருடைய இருப்பிடத்தை அடைய இன்னும் பத்து அடிதான் இருக்கும்.
மகான் அங்கு நின்றார்.
துஷ்டனைப் பார்த்து, “அப்பா, என்னை இன்னும் எவ்வளவு திட்ட வேண்டுமோ அவ்வளவையும் இங்கேயே திட்டிவிடு. ஏனெனில் என் இருப்பிடம் வந்துவிட்டது. அங்கே என் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உன்னைச் சும்மா விட்டு வைக்க மாட்டார்கள்’’ என்றார்.
அதைக் கேட்டு அந்த அயோக்கியன் வெட்கித் தலைகுனிந்து தன்னை மன்னிக்கும்படி மகானிடம் கேட்டுக் கொண்டான்.
மகான் அவனை மன்னித்தார்.