ஒரு நாள் கபீர்தாசர் வீட்டில் பல பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு அவரவர்களுக்கு ஏற்பட்ட ஆன்மிகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சந்தேகம் தெளிந்தவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.
ஒருவர் மட்டும் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார். மாலை 5 மணி இருக்கும்.
கபீர்தாசர், ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார். அந்த மனிதர் பதில் சொல்லத் தயங்கினார்.
கபீர் அவரிடம், ‘‘உங்கள் முகத்தைப் பார்த்தால் உங்களது குடும்ப வாழ்க்கை இன்பமாக இல்லை என்று தோன்றுகிறது. அப்படித்தானா?’’ என்றார்.
‘‘அப்படித்தான். நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தவில்லை. எப்போதும் சண்டைதான். நான் எது சொன்னாலும் அவள் கேட்பதில்லை. எதிர்த்துப் பேசுவாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை’’ என்றார் அவர்.
கபீர்தாசர் பார்த்தார்.
‘‘சரி, சிறிது நேரம் இங்கேயே இருங்கள். யோசனை செய்துவிட்டுப் பதில் சொல்கிறேன்’’ என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். வீட்டு வாசலில் வெளிச்சத்தில் அமர்ந்தார். அந்த நூற்கண்டில் ஏகப்பட்ட சிக்கல்கள். கபீர்தாசர் அதில் இருந்த சிக்கல்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பிரித்து எடுக்க ஆரம்பித்தார்.
வெளியில் நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. இருந்தாலும் திடீரென்று தன் மனைவியைக் கூப்பிட்டு, ‘‘ஒரே இருட்டு. விளக்கை எடுத்து வா’’ என்றார் கபீர்.
அவர் மனைவியும் உடனே ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து கபீருக்குப் பக்கத்தில் வைத்தார்.
‘இவ்வளவு வெளிச்சம் இருக்கிறதே. விளக்கு எதற்கு?’ என்று மனைவி கேட்கவில்லை. பேசாமல் கொண்டு வந்து வைத்துவிட்டு உள்ளேச் சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து கபீரின் மனைவி இரண்டு டம்ளர்களில் பால் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்துவிட்டுச் சென்றார்.
இருவரும் பாலைக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவர் முகம் அஷ்டகோணலானது. பாலை அவரால் குடிக்க முடியவில்லை. என்ன விஷயம்?
கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டிருந்தார். வந்திருந்தவர், கபீரின் முகத்தைப் பார்த்தார். கபீரின் முகத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவர் பாலைக் குடித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே இருந்த அவர் மனைவி, ‘‘பாலுக்குச் சர்க்கரை போதுமா?’’ என்று கேட்டார்.
‘‘போதும், இனிப்பு சரியாக இருக்கிறது’’ என்றார் கபீர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவர் மெதுவாக கபீரிடம், ‘‘நான் கேட்ட கேள்விக்குத் தாங்கள் இன்னும் பதில் கூறவில்லையே...?’’ என்றார்.
‘‘நான் இப்போது என் மனைவிக்கு என்ன பதில் கூறினேனோ, அதே பதில்தான் உங்களுக்கும். யஜுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? ‘எந்தக் குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவர் குற்றத்தை மற்றொருவர் பார்க்காமல் இருக்கிறார்களோ, அந்தக் குடும்பம் பூலோகக் கைலாசம்’ ’’ என்றார் கபீர்.