ஒரு பெரிய சந்தை. அது பல பேர் வந்து போகும் இடம். அங்கே ஒரு பிச்சைக்காரன் நின்று பிச்சையெடுத்தபடி நின்று கொண்டிருந்தான்.
நீண்ட காலமாக அவன் அந்த ஒரே இடத்தில் நின்று பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான்.
என்றாலும் அவன் வாயைத் திறந்து, “எனக்குப் பிச்சைப் போடுங்கள்” என்று யாரையும் கேட்டதில்லை.
அவன் தினமும் காலையில் அங்கே வருவான். அந்த இடத்தில் நிற்பான். வலது கையை மட்டும் முன்னால் நீட்டி ஏந்திக் கொண்டிருப்பான். அவன் வாயைத் திறந்து எதுவும் பேசுவதில்லை.
அந்த வழியாக வருகிறவர்களும் போகிறவர்களும் தாங்களாக அவன் கையில் ஏதாவது காசு போட்டுவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.
அந்த ஒரே இடத்தில் நின்று ஐம்பது வருடமாக அவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று ஒரு நாள் அவன் அந்த இடத்திலேயே விழுந்து இறந்து போனான்.
ஊர் மக்கள் பார்த்தார்கள்! - "ஐயோ பாவம்! இப்படி அநாதையாக விழுந்து இறந்து போய்விட்டானே!” என்று பரிதாபப்பட்டார்கள்.
அந்த ஊர் மக்களுக்கு அவன் மீது மிகவும் அனுதாபம்!
இவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தால் கூட ஒரு வித்தியாசமான ஆள். யாரையும் தொந்தரவு செய்ததில்லை.
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, “இந்தப் பிச்சைக்காரனுக்கு இதே இடத்தில் ஒரு சிலை வைக்க வேண்டும்!” என்று ஒரு தீர்மானம் போட்டார்கள்.
உடனே நிதி வசூலிக்க ஆரம்பித்தார்கள். பல பேர் முன் வந்து தாராளமாக நிதி கொடுத்தார்கள்.
அப்படி நிறையப் பணம் சேர்ந்து விட்டது.
அந்த ஆள் நின்றுகொண்டிருந்த இடத்திலேயே அஸ்திவாரம் தோண்ட ஆரம்பித்தார்கள்.
ஒரு இரண்டு அடி ஆழம்தான் தோண்டியிருப்பார்கள்.
திடீரென்று ஒரு வித்தியாசமான சத்தம், "டங், டங்” என்று கேட்டது!
அவசர அவசரமாக அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார்கள்! ஒரு பெரிய செப்புக்குடம் தெரிந்தது! அதை வெளியே எடுத்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள்.
அந்தச் செப்புக்குடத்தில் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தன.
அதைப் பார்த்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
கூட்டத்தில் ஒருவர், “பார்த்தீர்களா? இந்தப் பிச்சைக்காரன் தன் காலுக்கு அடியிலேயே புதையல் இருக்கிறது என்பது தெரியாததால் போகிறவர்கள், வருகிறவர்களிடமெல்லாம் 'பைசா'வுக்குக் கையேந்தி நின்றுகொண்டிருந்தே செத்துப் போனான்!” என்று கூறினார்.
அப்போது அந்த வழியாகத் துறவி ஒருவர் வந்தார்.
அவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்:
"ஆமாம்! ஒவ்வொரு மனிதனும்கூட இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறான்! தன் மனதில் குவிந்திருக்கும் திறமையையும், மகிழ்ச்சியையும், இன்பத்தையும், தெய்வத்தையும் அவன் புரிந்து கொள்வதில்லை. அது வெளியே எங்கேயோ இருப்பதாக நினைத்துக் கொண்டு, அதைத் தேடியபடியே மக்கள் காலம் முழுவதையும் கழித்து விடுகிறார்கள்"
இவ்விதம் சொல்லிவிட்டு அந்தத் துறவி அங்கிருந்து சென்றார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் அதன் பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
நம்மிடம் என்னென்ன இருக்கிறது என்பதை நாம் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்... ஆனால் அதையெல்லாம் தேடி வெளியே அலைந்து கொண்டிருக்கிறோம்.