ஒரு வியாபாரி தன்னிடமிருந்த பத்துக் கழுதைகளை விற்க ஓர் ஊருக்குச் சென்றான். அன்றிரவைப் பக்கத்திலுள்ள சத்திரத்தில் கழிக்க எண்ணினான். ஒரு கயிற்றால் எல்லாக் கழுதைகளின் கால்களையும் கட்டினான்.
ஆனால் அக்கயிறு பத்தாவது கழுதையின் காலுக்குப் போதவில்லை. எவ்வளவோ இழுத்துப் பார்த்தாலும் முடிச்சுகளை முறுக்கியும், கழுதைகளை நெருக்கமாக நிறுத்தி வைத்தும் கயிறு ஒன்பது கழுதைகளுக்கேப் போதுமானதாக இருந்தது. முயன்று முயன்று அலுத்து விட்டான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் வியாபாரி, “ஐயா, பத்தாவது கழுதையைக் கட்டாவிட்டால் அது இரவில் எங்காவது சென்றுவிடுமே....?’’ என்றான்.
“நீ ஒன்பது கழுதைகளையும் கட்டிக் கொண்டிருந்ததை எல்லாக் கழுதைகளும், ஏன் இந்தப் பத்தாவது கழுதையும் கூடப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆகவே பத்தாவது கழுதையின் காலையும் கட்டுவதுபோல் பாசாங்கு செய். சரியாகிவிடும்’’ என்றார் பெரியவர்.
வியாபாரியும் அவ்வாறே செய்துவிட்டு நன்றாக உறங்கினான். காலையில் பார்த்தான். பத்தாவது கழுதையும் மற்ற கழுதைகளுடன் கட்டப்பட்டது போலவே அமைதியாக இருந்தது.
அவனுக்கு ஆச்சரியம். பெரியவருக்கு நன்றி கூறிவிட்டு, ஒன்பது கழுதைகளையும் அவிழ்த்தான். அவை நடக்க ஆரம்பித்தன.
பத்தாவதோ இடத்தை விட்டு அகலவே இல்லை. தள்ளிப் பார்த்தான். அதட்டிப் பார்த்தான். ஊஹூம், அசைவதாகவே தெரியவில்லை. அவனைப் பார்த்துச் சிரிப்பது போல கண்களை உருட்டிக் கொண்டு நின்றது.
உடனே பெரியவர், “நீ கட்டுவது போலப் பாசாங்கு செய்தாயே, அதே போல இப்போது அதனை அவிழ்ப்பது போலக் காட்டு. கழுதை தானாக மற்ற கழுதைகளுடன் வரும்’’ என்றார்.
அதன்படி வியாபாரி செய்தான். பத்தாவது கழுதையும் மற்றக் கழுதைகளுடன் நடக்க ஆரம்பித்தது.
பத்தாவது கழுதைக்கும் மக்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை. ஏதோ பந்தப்பட்டவர்களைப் போலத் தங்களை எண்ணிக் கொண்டு வாழ்வில் முன்னேறாமல் இருக்கிறார்கள். காலம் வரும் போது பந்தம் அறுபட்டாற் போல எண்ணி முன்னேறுகிறார்கள்.