ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றனர். அப்போது அங்கே ஸ்ரீராமரிடம் அரக்கர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முனிவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஸ்ரீராமரும் அரக்கர்களை வதைப்பதாக அவர்களுக்கு வாக்களித்தார்.
இது சீதைக்கு மனதில் உறுத்தியது: ‘நாமோ வனவாசத்திற்கு வந்துள்ளோம்! இங்கும் யுத்தம் வேண்டுமா? அதுவும் அரக்கர்களால் நமக்கு ஓர் இடையூறும் ஏற்படாதபோது...?’
அதனால் ஸ்ரீராமரிடம் சீதை, ‘‘சுவாமி! ஆசையால் வரும் துன்பங்களைத் தவிர்க்க முடியும்; மூன்று விதமான ஆசைகள் எழுகின்றன.
‘‘ஒன்று, பொய் கூறுவது; இரண்டாவது பிறன்மனை நோக்குதல்; மூன்றாவது பகை இல்லாமலேயே ஒருவரைக் கொல்வது.
‘‘சுவாமி! தாங்கள் பொய் பேசியதில்லை; பிறன்மனை நோக்கா பேராண்மையாளர் நீங்கள்.
‘‘ஆனால் உங்களைத் துன்புறுத்தாத அரக்கர்களை நீங்கள் ஏன் வதைக்க வேண்டும்? எனக்கு இது மனதை உறுத்துகிறது. தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்’’
‘‘ஒரு காட்டில் தபஸ்வி ஒருவர் கடும் தவமியற்றி வந்தார். அவரது தவம் கண்டு அஞ்சிய இந்திரன், ஒரு போர்வீரன் வேடத்தில் அந்த தபஸ்வியிடம் சென்றான். கூரான வாள் ஒன்றை அவரிடம் தந்து அதனைப் பத்திரமாகப் பாதுகாத்து வருமாறு கேட்டுக் கொண்டான். சில தினங்களில் அதைத் திரும்பிப் பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றான்.
‘‘தபஸ்வி அந்த வாளைக் கவனமாகப் பாதுகாத்து வந்தார். பாவம்! எங்கு சென்றாலும் அந்த வாளை எடுத்துச் செல்வார். நாட்கள் செல்லச் செல்லக் கொஞ்சம் கொஞ்சமாகக் தவம் செய்வதையே குறைத்துக் கொண்டுவிட்டார்.
‘‘அந்த வாளினால் அவருடைய தீவிரமான தவமும் கலைந்தது; அதனைக் கொண்டு கொலைத் தொழில்களும் செய்ய ஆரம்பித்தார். கடைசியில் அவர் நரகத்தில் விழ வேண்டியதாயிற்று.
‘‘அதனால் ஒருவரது கையில் ஆயுதம் இருந்தால் இது மாதிரிப் பாவச் செயல்கள் செய்யத் தூண்டும்! நீங்கள் இது போன்ற பாவத்தைச் செய்ய வேண்டுமா?’’ என்று கேட்டாள்.
பிறகு சீதை, ‘‘ஏதோ பெண்களுக்குத் தோன்றும் இயற்கையான சந்தேகங்களால் நானும் உங்களுக்குச் சொன்னேன். உங்களுக்குத் தர்மத்தை போதிக்க யாரால் முடியும்? எதற்கும் உங்கள் சகோதரனைக் கலந்து செய்யுங்கள்’’ என்றாள் அமைதியாக!
பிறகு ஸ்ரீராமர் ‘தர்மத்தைக் காப்பதற்காகத்தான் நான் அரக்கர்களை வதைக்கப் போகிறேன். அவர்கள் மீதுள்ள வெறுப்பால் அல்ல’ என்பதைப் புரிய வைத்தார்.