சிராவஸ்தி என்ற மிகப் பிரசித்தி பெற்ற நகரில் ஒரு வியாபாரியின் மகளாகப் பிறந்தாள் படாசாரா.
அவளது இயற்பெயர் தெரியவில்லை. பருவம் வந்த போது அவள், தன் தந்தையிடம் வேலை பார்த்து வந்த ஓர் இளைஞன் மீது மையல் கொண்டாள்.
இந்த விவரம் அறியாத தந்தை தன் கௌரவத்திற்கு ஏற்ற இடத்தில் அவளை மணமுடிக்க நினைத்தார். ஆனால், இந்தச் சங்கடத்தினின்றும் தப்புவதற்காக அந்தப் பெண்ணும் அந்த இளைஞனும் பக்கத்துக் கிராமத்திற்கு ஓடி, அங்கு மணம் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.
அவள் கருவுற்ற போது பிறந்த வீடு செல்ல மிகவும் விரும்பினாள்.
ஆனால், புருஷன் அதற்கு இசையவில்லை. இரண்டாவது குழந்தை பிறக்க இருந்த போது அவள் தந்தையிடம் செல்லப் பிடிவாதம் செய்யவும் புருஷன் இணங்கினான்.
ஆனால், வழியிலேயே அவளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது.
தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பாகக் குடிசை ஒன்று போட்டுத் தருவதற்காகச் செடி கொடி சேகரிக்க அருகிலிருந்த காட்டுக்குச் சென்ற கணவன், நாகம் தீண்டி இறந்து விட்டான்.
பிரசவம் ஆகியிருந்த பெண் அவனுடைய வருகைக்காகக் காத்திருந்து, காத்திருந்து கவலையுற்றாள்.
பின் அந்தத் தள்ளாத நிலையில் தானே எழுந்து சென்று தேடிப் பார்த்தாள்.
புருஷன் பிணமாகக் கிடப்பது கண்டு ‘ஓ’வென அழுதாள்.
பிறகு, மூத்த குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு பிறந்த சிசுவைக் கரங்களில் தாங்கியவாறு அவள் தந்தையின் இல்லம் நோக்கி நடந்தாள். வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது.
இரு குழந்தைகளுடன் ஆற்றைக் கடக்க முடியாது என்பதால் அவள் மூத்தவனைக் கரையில் நிறுத்திவிட்டுக் கைக்குழந்தையுடன் மறுகரை சேர்ந்தாள்.
குழந்தையை ஒரு கல்லின் மீது இருத்திச் சில தழைகள் கொண்டு அதை மூடிவிட்டு மூத்த குழந்தையை அழைத்து வர எதிர்க்கரை நோக்கிப் புறப்பட்டாள்.
பாதி ஆறு கடந்ததும் பெரிய பருந்து ஒன்று மறுகரையில் இருந்த சிசுவை நோக்கிப் பாய்ந்து இறங்கியது. அவள் பரபரப்புடன் அதைத் துரத்துவதற்காகக் கைகளைத் தூக்கி ஆட்டினாள்.
இது கண்டு எதிர்க் கரையில் இருந்த மூத்த குழந்தை, ‘தாயார் தன்னை வருமாறு அழைக்கிறாள்’ என எண்ணி ஆற்றில் இறங்கிவிட்டது.
ஐயோ, கைக்குழந்தையைப் பருந்து தூக்கிச் சென்றது; மூத்தவனை வெள்ளம் அடித்துக் கொண்டு போனது.
இவற்றைக் கண்ட அந்த அபலை நிலைகுலைந்து போனாள்.
வேறு கதியின்றித் தந்தையின் இல்லம் சென்றாள். அங்கு முன் இரவு பெய்த மழையில் அவள் பிறந்து வளர்ந்த பழைய வீடு இடிந்து அவளது பெற்றோரும் சகோதரனும் இறந்துபோன செய்தி அறிந்தாள்.
அவளது தலை சுழன்றது; மூளை குழம்பிற்று. பைத்தியமே பிடித்துவிட்டது.
கண்டபடி பிதற்றியபடியும், பயங்கரமாக விழித்துப் பார்த்துக் கொண்டும் சுய அறிவு அற்றவளாக, பைத்தியக்காரியாக ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தாள்.
ஆனால், அவளது முற்பிறவியின் நல்வினைப் பயனாக அவளுக்கு புத்தரின் கிருபை கிட்டிற்று.
ஓரிடத்தில் மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த போது புத்தர் அந்தப் பைத்தியக்காரியைக் கண்டார்.
அந்தக் கருணாமூர்த்தி அவளைச் சுயநிலைக்கு மீளுமாறு அனுக்கிரகித்தார்.
பின் அவள் புத்தர் முன்வந்து அவளது பெரும் கஷ்டங்களைக் கூறினாள்.
புத்தர் அவளிடம், மகளே, இது போல் உறவினரை இழந்து நீ கண்ணீர் பெருக்கியது உன் முன் ஜன்மங்களில் எத்தனை எத்தனை தடவைகளோ! நீ சிந்திய கண்ணீரையெல்லாம் சேர்த்தால் நான்கு கடல்கள் நிரம்பும்! மகனோ, மகளோ, வேறு உற்றார் உறவினரோ ஒருவரது துயரைப் போக்கமுடியாது. நற்போதனை கேட்டு நன்முயற்சி செய்து நல்லறிவு பெற்று அவரவரே தாம் தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும்" என்று உபதேசித்தார்.
படாசாராவின் மனம் தெளிந்தது. புத்த சங்கத்தில் பிக்ஷுணியாகச் சேரும் பேறு பெற்றாள். பல நற்காட்சிகள் பெற்று அவள் பௌத்த தத்துவங்களில் தேர்ந்தவள் ஆனாள்.
‘அர்ஹத்’ என்ற பூரண நிலையையும் அடைந்தாள். ஆசாரங்களில் அல்லது கடமைகளில் அவள் மிகத் தேர்ந்தவளாக இருந்ததால் ‘படாசாரா’ என்ற பெயர் பெற்றாள். புத்தரே அவளை மிகவும் புகழ்ந்தார்.
படாசாராவிடம் முப்பது பிக்ஷுணிகள் பயிற்சி பெற்றுப் பெருநிலை எய்தினர். பௌத்த சங்க வரலாற்றில் படாசாரா இன்றும் அழியாப் புகழிடம் பெற்று விளங்குகிறாள்.