ஒரேடியாகப் புகழ்ந்து பேசுபவன் ஒருவன் அரசனைப் பார்க்க வருவதாகவும், அவன் புகழ்ச்சியில் மயங்கி அரசர் அவனுக்கு அதிகப் பரிசுகளை வழங்கக் கூடாதென்றும் மந்திரிகள் கூறினர்.
“சுலபமாக என்னை ஏமாற்றி விட முடியாது’’ என்றார் அரசர்.
புகழ்ந்து பேசுபவன் வந்தான்.
அரசனின் கால்களில் வீழ்ந்து வணங்கி, “மிகப் பெரிய சக்கரவர்த்தியோடு ஒரே அறையில் இருப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்கிறேன். அவரது ஒளிக்கு முன்பும், அவரது அழகான தோற்றத்திற்கு முன்பும்...’’ இப்படிச் சொல்லிக் கொண்டேப் போனான்.
அவன் சிறிது நிறுத்தியதும் மந்திரிகள் அரசனிடம் மெல்ல, “நாங்கள் கூறவில்லையா? இவன் இப்படித்தான். இவனிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’’ என்று சொன்னார்கள்.
அரசன், “பயப்படாதீர்கள். என்னை அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது. அவன் அந்த மாதிரி புகழ ஆரம்பித்தவுடன் அவனை வெளியேத் துரத்திவிடுவேன். ஆனால் அவன் இதுவரையில் உண்மையைத்தானேச் சொன்னான்’’ என்றார்.
மந்திரிகள் திகைத்து நின்றார்கள்.