எப்போதும் ஏதோ ஒரு பிரச்னையால் வெறுத்துப் போன ஒருவன் புத்தரைக் காணச் சென்றான்.
அவன் ஒரு விவசாயி. பார்க்கப் போனால் அப்படியொன்றும் வானம் இடிந்து அவன் தலையில் விழவில்லை. வாழ்வின் சாரத்தை உறிஞ்சும் சின்னச் சின்னக் கவலைகள், ஏமாற்றங்கள், அவ்வளவுதான்!
சில சமயங்களில் போதிய மழை பெய்யவில்லை. சில சமயம் அதிக மழையால் பயிர் சேதமடைந்தது.
மனைவி நல்லவள்தான்; சமயங்களில் நச்சரிப்பாள். பிள்ளைகளும் கெட்டவர்களல்ல; ஆனாலும் அவ்வப்போது பிரச்னைகள் எழவே செய்தன.
புத்தர் அவன் கூறியதையெல்லாம் பொறுமையாகக் கேட்டார். அவனது பிரச்னைகளை எண்ணிக் கொண்டே வந்தார். பிறகு, ''என்னால் உனக்கு உதவ முடியாது'' என்றார்.
துணுக்குற்ற விவசாயி, ''நீங்கள் பெரிய ஞானி; எனக்கு வழிகாட்டுவீர்கள் என்றல்லவா எண்ணியிருந்தேன்?'' என்று கேட்டான்.
புத்தர், ''அனைவருக்கும் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பிரச்னை தீர்ந்தால் உடனே அடுத்தது வரும். அது பற்றி நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை! '' என்றார்.
விவசாயிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ''அப்படியானால் உங்கள் உபதேசத்தால் என்ன பயன்?''
''சரி. என் உபதேசம் உனக்கு உன் 84–வது பிரச்னையைத் தீர்ப்பதில் உதவலாம்''
''84–வது பிரச்னையா?''
''அதுவா! உனக்குப் பிரச்னைகளே இல்லாத வாழ்க்கை அமைய வேண்டும் என்று நீ விரும்புவதுதான் 84–வது பிரச்னை. அதை விட்டுவிட்டால் உன் மற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது எளிது!'' என்று விளக்கினார் புத்தர்.
நமக்குப் பிரச்னைகளே இருக்கக் கூடாது என்ற அசாத்தியமான விருப்பத்தை விட்டுவிட்டு, 'பிரச்னைகள் இயற்கை நியதி. அவை வரவே செய்யும்' என்பதை ஒப்புக் கொண்டுவிட்டால் நம் மனம் தெளிவடையும். பிறகு பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண முடியும். அவற்றை எப்படி எதிர்கொண்டு, கையாள்வது என்பது நம் கையில்தான் உள்ளது. பிரச்னைகளின் தீர்வு நமக்குள்ளேயே உள்ளது என்ற உண்மை புலனாகும்.