தன் நண்பன் தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக அந்தச் சிறுவன் தன் தாத்தாவிடம் கூறினான்.
தாத்தா பேரனைத் தேற்றி, ‘‘நேர்மையற்ற செயல்களைச் செய்துவிட்டுக் கவலையின்றித் திரிபவர்களைக் கண்டால் எனக்குக்கூட உன்னை மாதிரிதான் ரத்தம் சூடேறும், கோபம் வரும். ஆனால் உன் வெறுப்பு உன்னைத்தான் அழிக்கும், உன் எதிரிகளை அல்ல. நீ விஷத்தை விழுங்கிவிட்டு உன் எதிரிகள் ஒழிய வேண்டும் என்று நினைப்பதைப் போல்தான் அதுவும்’’ என்றார்.
பேரன் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
தாத்தா மேலும், ‘‘குழந்தாய்! ஒரு கதை கேள். என் மனதிற்குள் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒன்று நல்லது, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாது. ஆனால் தேவையானால் மட்டும் நீதியான வழியில் சண்டையிடும். ஆனால்... இன்னொரு ஓநாய் இருக்கிறதே... அது சிறு விஷயத்திற்கெல்லாம் கோபத்தின் உச்சத்திற்கேச் சென்றுவிடும். நல்லது எது, கெட்டது எது என்று ஆலோசிக்காது. அந்த அளவிற்குக் கோபமும் வெறுப்பும் அதனை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஆனால் அதன் கோபத்தால் அதற்கும் சரி, மற்றவருக்கும் சரி எந்தப் பயனுமில்லை.
‘‘இந்த இரு ஓநாய்களையும் என்னுள் வைத்துக் கொண்டு வாழ்வது எனக்குச் சில சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில், அவை இரண்டும் எப்போதும் என் உணர்ச்சிகளின் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்று கொண்டிருக்கும்’’
சிறுவன் தாத்தாவிடம், ‘‘தாத்தா! இந்த இரண்டில் எந்த ஓநாய் ஜெயிக்கும்?’’ என்று கேட்டான்.
‘‘எதை நான் ஆதரிக்கிறேனோ, அதுதான்’’