ஊருக்கு வெளியே ஒரு மரத்தடியில் குரு இருந்தார். மன்னனை அன்புடன் வரவேற்று,‘‘அரச காரியங்கள் செவ்வனே நடக்கின்றனவா? மக்கள் துயரின்றி இருக்கிறார்களா?’’ என்று கேட்டார்.
‘‘ஆம், சுவாமி. ஒரு குறையுமின்றி வாழ்ந்து வருகிறார்கள்’’
‘‘அப்படியானால் உனக்கு என்ன குறை?’’
‘‘என் மனதில் சிறிதும் அமைதியில்லை!’’ என்றான் மன்னன் ஏக்கத்துடன்.
சிறிது யோசித்த பிறகு குரு, ‘‘ஒன்று செய். உன் நாட்டை எனக்குக் கொடுத்துவிடு!’’ என்றார்.
ஆச்சரியப்பட்ட மன்னன், ‘‘எடுத்துக் கொள்ளுங்கள், சுவாமி!’’ என்றான்.
‘‘சரி, நாட்டை எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ என்ன செய்வாய்?’’ என்று கேட்டார் குரு.
மன்னன் சற்றும் தயக்கமின்றி, ‘‘என் வழிச் செலவுக்குச் சிறிது பொருள் எடுத்துக்கொண்டு எங்காவது செல்வேன்!’’ என்றான்.
‘‘நாட்டையே எனக்குத் தந்த பிறகு கஜானா என்னுடையதுதானே? அதில் பொருள் எடுக்க உனக்கு ஏது உரிமை?’’ என்று மன்னனை மடக்கினார் குரு.
திகைத்த மன்னன்‘‘, ‘‘தாங்கள் சொல்வது சரிதான். நான் இப்படியே போகிறேன்!’’ என்றான்.
‘‘எங்கு போவாய்?’’
‘‘எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்வேன்’’
‘‘அந்த வேலையை இங்கேயே நீ செய்யலாமே?’’ என்ற குரு, ‘‘என் பிரதிநிதியாக இந்த நாட்டை நீயே ஆண்டு வா. உன் செலவுக்கு அரண்மனைப் பொக்கிஷத்தில் இருந்து ஊதியம் பெற்றுக்கொள். எனக்கு எப்போது வசதிப்படுமோ அப்போது நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.
‘சரி’ என்றபடி நாடு திரும்பினான் மன்னன்.
இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடின.
திடீரென ஒரு நாள் குரு அரண்மனைக்கு வந்தார். மன்னன் குருவைப் பணிந்து வரவேற்றான்.
‘‘என்ன மன்னா, எப்படி இருக்கிறது நாடு?’’
‘‘ஆஹா! கணக்கு வழக்குகள் எல்லாம் சரியாக இருக்கின்றன. நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.’’ எழுந்திருந்தான் மன்னன்.
கணக்குகளைக் கொண்டு வர எழுந்த மன்னனைக் கையமர்த்திக் தடுத்தார் குரு.
‘‘கணக்குகள் இருக்கட்டும். உன் மனநிலை எப்படி இருக்கிறது?’’
‘‘நிம்மதியாய் இருக்கிறது’’ என்றான் மன்னன்.
‘‘ஏன்?’’
மன்னனுக்குப் புரியவில்லை.
‘‘இதற்கு முன் நீ செய்த ஆட்சிக்கும், இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கும் ஏதாவது மாறுதல் தெரிகிறதா?’’ குரு நிதானமாய்க் கேட்டார்.
‘‘இல்லை’’ என்றான் மன்னன் திகைப்புடன்.
‘‘அதே அரண்மனை, அதே அதிகாரிகள், அதே பரிபாலனம். ஆனால் இப்போது உனக்கு நிம்மதி இருக்கிறது, அப்போது இல்லையே, அது ஏன்?’’
மன்னன் விழித்தான். குரு விளக்கினார்:
‘‘அப்போது ‘இது உனது’ என நீ இருந்தாய். இப்போது, ‘இது வேறொருவருடையது; நான் வெறும் பிரதிநிதி’ என்று இருக்கிறாய். ‘இது எனது’ என்று நீ எண்ணிய வரையில் உன் மனம் நிம்மதியற்றுத் திண்டாடியது. ‘இது எனது இல்லை’ என்ற உணர்வு ஏற்பட்டதுமே மனதின் துயரங்கள் விலகிவிட்டன.
‘‘உண்மையில் இந்த உலகம் நமதல்ல. படைத்தவன் யாரோ! இந்த உடல் நமதல்ல. அளித்தவன் யாரோ! ஆகவே ‘இது எனதல்ல’ என்ற நினைப்புடன் நீயே ஆட்சி புரிந்து வா. அந்தப் பற்றற்ற மனநிலை உனக்கு வந்துவிட்டால் அரண்மனையோ - கானகமோ, காவலரோ- கள்வரோ, எங்கு- எவர் நடுவில் இருந்தாலும் உன் மனதைத் துயரங்கள் அணுகாது!’’ என்று கூறி விடைபெற்றார் குரு.
அரசன் ராஜரிஷியாக அரசாட்சி புரிந்தான்.