ஒரு குருவிடம் சீடன், ‘‘குருவே! கடவுளைக் காண முடியுமா?’’ என்று கேட்டார்.
‘‘அதிலென்ன சந்தேகம்? உன் பின்னால் என்றும் இருக்கிறார் இறைவன்’’ என்றார் குரு.
குரு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். சீடன் குரு சொன்னதைச் சோதித்துப் பார்த்தான்.
‘எங்கே, கடவுள் என் பின்புறம் இருக்கிறாரா, பார்ப்போமே?’ என்று திரும்பினான். யாருமில்லை.
குரு பொய் கூற மாட்டாரே என்று சீடன் திரும்பவும் பின்புறம் திரும்பிக் கடவுளைத் தேடினான். பல தடவை திரும்பினாலும் கடவுள் தெரியவில்லை.
பிறகு குருவிடம் சென்று, ‘‘சுவாமி! கடவுள் பின்புறம் இருக்கிறார் என்றீர்களே?...’’ என்றான் சீடன்.
குருவுக்குத் தெரியாதா சீடனின் புத்திகூர்மை.
‘‘அட முட்டாளே! இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்? கடவுள் உன் பின்னாலேயே இருக்கிறார். நீ திரும்பும்போது அவரும் உன் பின்பக்கம் சென்று விடுகிறார். அவ்வளவுதான்’’ என்றார் குரு.