எதிரே வந்த நண்பரிடம், ‘‘ ஒரு பட்டிமன்றத்திற்குப் போகிறேன்’’ என்றேன்.
‘‘சார், இப்பல்லாம் பட்டிமன்றங்கள் ரொம்ப சாதாரணமாயிருக்கு. நேற்று ஒரு பட்டிமன்றத்துல இட்லிக்குத் தொட்டுக் கொள்ளச் சிறந்தது சட்னியா? சாம்பாரா? - இதுதான் தலைப்பு’’
‘‘நடுவர் என்ன தீர்ப்பு சொன்னார்?’’
‘‘அதை ஏன் கேட்கறீங்க? இட்லி சாப்பிட இரண்டும் தேவை என்றார்’’
‘‘ஐயோ, இது ஒரு தீர்ப்பா?’’
‘‘இதோடு இல்லாம மிளகாய்ப் பொடியும் சேர்த்தா இன்னும் ஜோரா இருக்கும். இந்த மூன்றையுமே எங்கள் கம்பெனியிலே தயாரிக்கிறோம்... இதை விளம்பரம் செய்யத்தான் நான் இந்தப் பட்டிமன்றத்தையே ஸ்பான்சர் செய்றேன், அப்படிங்கிறார் சார்’’
‘‘ஆனால் நான் இப்போ நடுவராக இருக்கப் போகும் பட்டிமன்றம் அப்படியில்லை’’
‘‘என்ன சார் தலைப்பு?’’
‘‘பெண்ணுக்குத் தாலி தேவையா, இல்லையா? இதுல சிறந்த பேச்சாளருக்குச் சிறப்புப் பரிசு ஒரு பவுன் சார்!’’
இருவரும் பட்டிமன்றத்துக்குப் போனார்கள். நடுவர் இருக்கையில் அமர்ந்தார் ஒருவர். நண்பர் பார்வையாளர் ஆனார்.
‘தாலி பெண்ணுக்கு வேலி’ - என்றது ‘தாலி தேவை’ கட்சி.
‘பெண் என்ன ஆடா? மாடா? வேலி போட?’ என்று கொதித்தது ‘தாலி வேண்டாம்’ கட்சி. இப்படிப் பலர் பேச, ஏச மன்றம் சூடு பிடித்தது.
‘தாலி தேவை’ கட்சி வாதத்தில் வலுத்துக் கொண்டே வந்தது.
கடைசியில் தேவையில்லை கட்சிப் பேச்சாளர், 50 வயதான பெண், பெரிய பொட்டு, தலை நிறையப் பூவுடன் நடந்து வந்து மைக்கைப் பிடித்தார்.
இவரைப் பார்த்தால் ‘தாலி தேவை’ என முழங்குபவர் போல் இருக்கிறதே என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.
அவரோ, ‘‘ஆண்களே, நீங்க கட்டுறீங்க, நாங்க மாட்டிக்கிறோம். தினமும் ஆயிரம் தடவை நான் தாலி கட்டியிருக்கேன், கட்டியிருக்கேன் என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்துறீங்க. நான் சொல்றேன். இந்தத் தாலி ஒரு வேஸ்ட். இதோ இதை நான் வீசியெறியப் போறேன்’’ என்ற அம்மணி ஐயையோ, அப்படியே செய்தும்விட்டார்.
கூட்டம் கைதட்டிப் பாராட்டியது. அப்புறமென்ன சிறந்த பேச்சாளராக அவர் ஒரு பவுனுக்கான தொகையைப் பெற்றார்.
உடனே அந்தப் பெண் பணத்துடன் பின் வழியாக வெளியே சென்றார். அடுத்திருந்த ஒரு கடையில் நுழைந்து என்னவோ வாங்கினார்.
அதைப் பார்த்துக் கொண்டே வந்தார் பட்டிமன்ற நடுவர், அவர் ஒரு பத்திரிகையின் நிருபருங்கூட. அவர், ‘‘அம்மா, பரிசுத்தொகைக்கு என்ன வாங்கினீங்க?’’ என்று கேட்டார் ஆர்வத்துடன்.
பெண்மணி அவசரமாக அவரைத் தவிர்த்தபடி வாசலுக்கு விரைந்தார். அங்கே காத்திருந்த தன் கணவருடன் அருகிலிருந்த கோயிலில் அம்பாள் சந்நிதியில் நின்று அந்தப் பெட்டியை எடுத்துத் திறந்தார்.
பெட்டியிலோ பளபளக்கும் தங்கத் தாலி!
சைகையாலேயே கணவனுக்குக் கூறி அம்பாளின் முன் தாலியைக் கட்டச் செய்தாள். பிறகு அம்பாளை வணங்கினார். விடாது தொடர்ந்த நிருப-நடுவர் அங்கு வந்து, ‘‘அம்மா நீங்க...?’’ என்று ஆரம்பித்தார்.
அதற்கு அந்தப் பெண், ‘‘சார், எத்தனை நாள்தான் வெறும் மஞ்சள் தாலியுடன் இருப்பது? நானோ ஏழை. தங்கம் வாங்கப் பணத்திற்கு எங்கே போவது? மேடையில் இப்படி செய்யிறதை விட்டா வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. இப்ப அம்பாள் அருளால் எனக்குத் தங்கத் தாலியும் கிடைத்துவிட்டது’’ என்றாள்.
‘‘அப்போ மேடையிலே வீசியது?’’ - நிருபர்.
‘‘அது மேடையேறும்போது கையில ஒரு சின்ன மஞ்சக் கயிறு கெடச்சது, அதான் சார் அது. தாலிய விட்டெறிய முடியுமா? அது சாமி குத்தமில்லே..?’’ என்று சிரித்தார்.
‘அட, பட்டிமன்றம் இப்படியெல்லாம் கூடப் பயன்படுகிறதா, பரவாயில்லையே!’ என வியப்பில் விக்கித்து நின்றார் நிருபர் மற்றும் நடுவர்.