ஓர் ஊரில் ஆடு மேய்க்கும் ஏழை ஒருவன் இருந்தான். மிகவும் நல்லவன், புத்திசாலி. எல்லோரிடமும் பணிவாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வான்.
ஒரு நாள், அவனை அந்த நாட்டு மன்னர் தற்செயலாகச் சந்தித்தார். அவனது அறிவும், ஆற்றலும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட ஒருவன் தம்மோடு இருந்தால் அது தேசத்துக்கு நல்லது என்று நினைத்தார்.
உடனே அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவனுக்குச் சில பொறுப்புகளைத் தந்தார். தந்த பொறுப்புகளை அவன் ஒழுங்காகச் செய்தான். சீக்கிரமே அவனை நாட்டுக்குத் தலைமை அமைச்சராக ஆக்கிவிட்டார்.
ஆடு மேய்த்த ஒருவன் ஆட்சிப் பீடத்துக்கு வந்துவிட்டால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா?
அந்தப் பதவி தமக்குக் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் அவனைப் பார்த்துப் பொறாமைப்பட ஆரம்பித்தார்கள்.
அதோடு, அவனைப் பதவியிலிருந்து கீழே இறக்குவது எப்படி என யோசிக்கவும் செய்தார்கள். அவனைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமான வதந்திகளைக் கிளப்பிவிட்டார்கள்.
அவனை அவமானப்படுத்த எதை எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தார்கள். இருந்தாலும் மன்னருக்கு அவன் மீதிருந்த நம்பிக்கை குறையவே இல்லை.
ஒரு சமயம் மன்னர் அவனை இன்னொரு முக்கியமான மாநிலத்துக்கு ஆட்சியாளராக அனுப்பிவைத்தார். இதுதான் இவர்களுக்குச் சரியான சமயம். அவன் தலைநகரை விட்டுப் போனதும் இவர்களெல்லாம் மெல்ல மன்னரிடம் சென்று தலையைச் சொறிந்து கொண்டு நின்றார்கள்.
என்ன விஷயம்?" என்று கேட்டார் மன்னர்.
மன்னா, எங்களை மன்னிக்க வேண்டும்!"
எதற்காக? என்ன தவறு செய்தீர்கள்!"
நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நம் நாட்டில் தவறு எதுவும் நடக்கக்கூடாதே என்ற கவலையில்தான் வந்துள்ளோம்!"
என்ன? விவரமாகச் சொல்லுங்கள்"
அரசே! நமது தலைமை அமைச்சர் மீது ஊழல் புகார் தர வந்திருக்கிறோம்!"
என்ன?" -அரசர் திகைத்துப் போனார்.
உண்மையைத்தான் சொல்கிறோம் மன்னா..!"
ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவனைக் கொண்டுவந்து உயர்ந்த பதவியில் அமர்த்தினீர்கள். அவன் இப்போது பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலைக்குப் போய்விட்டான்!"
எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?"
அவன் எங்கு சென்றாலும் ஒரு பெட்டியை கூடவே எடுத்துக் கொண்டு போகிறான். முறைகேடாகத் தான் சேர்த்த செல்வத்தை அதில்தான் மறைத்து வைத்திருக்கிறான். அதை விட்டு அவன் பிரிவதே இல்லை. வெளியூர் செல்லும் போதெல்லாம் அதை ஓர் ஒட்டகத்தின் முதுகில் வைத்து எடுத்துக்கொண்டு போகிறான். இரவு நேரத்தில் தனது கூடாரத்தில் தான் மட்டும் தனித்திருக்கும்போது அதைத் திறந்து பார்த்துக் கொள்கிறான்!"
சரி, இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"
அவனுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று இதை நாங்கள் கண்டுபிடித்தோம்!"
சரி. நீங்கள் போகலாம்!" அவர்கள் உற்சாகத்தோடு திரும்பிப் போனார்கள்.
இந்தப் புகாரில் உண்மை இருக்காது என்றே மன்னர் நம்பினார். இருந்தாலும் உண்மை என்ன என்பது ஊருக்குத் தெரிய வேண்டுமே!
ஒரு நாள் நள்ளிரவில் மன்னர் புறப்பட்டுத் தலைமை அமைச்சர் தங்கியிருந்த கூடாரத்திற்குள் திடீரென நுழைந்தார். அமைச்சர் அந்தப் பெட்டியை அப்போதுதான் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார். மன்னர் கூர்ந்து கவனித்தார்.
அந்தப் பெட்டியில் என்னதான் இருந்தது?
ஆடு மேய்த்தபோது அவன் அணிந்திருந்த அந்தப் பழைய கிழிந்த சட்டையும், கட்டியிருந்த துண்டும் அதில் இருந்தன.
எதற்காக இப்படி...?" என்பதுபோல மன்னர் அவனைப் பார்தார். அமைச்சர் சொன்னார்:
மன்னா! பதவி, பணம், புகழ் - இந்த மூன்றிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. இவை, சுலபமாக நம்மை உயரே கொண்டுசெல்லும். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் சுலபமாக நம்மைக் கீழேயும் தள்ளிவிடும்.
அப்படி விழுந்தால் அந்த அடி பலமாக விழும். உண்மை, நேர்மை, பணிவு - இவை நம்மிடம் இருந்தால் அப்படிக் கீழே விழுந்து அடிபட வேண்டிய அவசியம் ஏற்படாது.
நான் அடிபடாமல் இருக்கவே விரும்புகிறேன். எவ்வளவு உயர்ந்த பதவிக்கு வந்தாலும் எனது பழைய நிலையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளவே இந்த ஏற்பாடு!
பதவியில் நான் தலைமை அமைச்சராக இருக்கலாம். ஆனால் பணிவில் நான் பழைய ஆடு மேய்ப்பவன்தான்!"
அதைக் கேட்ட அரசனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அவரை அப்படியே தழுவிக் கொண்டார்.