அந்த அடர்ந்த காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது ஓர் ஆட்டு மந்தை.
திடீரென்று தூரத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.
உடனே ஆடுகள் மூலைக்கொன்றாகச் சிதறியோடின. ஓர் ஆட்டுக்குட்டி மட்டும் ஒரு முட்புதரில் மாட்டிக்கொண்டது.
ஆட்டுக்குட்டி ஒரு வழியாகப் புதரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதுபோது நன்றாக இருட்டிவிட்டது. தாயிடம் செல்ல வழி தெரியாமல் தவித்தது.
தட்டுத் தடுமாறி நடந்த ஆட்டுக்குட்டி, அங்கிருந்த ஒரு குளக்கரையில் அமர்ந்தது. நிலவொளியில் ஈர மண்ணில் தெரிந்த சிங்கத்தின் கால்தடத்தைக் கண்டு கலங்கிப் போனது.
முதலில் பயந்தாலும், பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ‘சிங்கத்தின் இந்தக் காலடிச் சுவடே இப்போது எனக்கு அடைக்கலம்’ என்று எண்ணியது.
சற்று நேரத்தில், ஓநாய் ஒன்று ஆட்டுக்குட்டியைக் குதற வேகமாக வந்தது. ஆட்டுக்குட்டி மிடுக்காக, ‘‘ஓநாயே, எங்கே வந்தாய்?’’ என்று கேட்டது.
‘‘உன்னைத் தின்ன வந்தேன்’’ என்றது ஓநாய்.
ஆட்டுக்குட்டி அலட்சியமாக, ‘‘முதலில் நான் யாருடைய பாதுகாப்பில் இருக்கிறேன் என்று பார்! பிறகு என்னைத் தின்ன முடியுமா என யோசி’’ என்றது.
ஓநாய் சிங்கத்தின் கால்தடத்தைப் பார்த்தது. அதன் மனதில் சிங்கத்தின் கர்ஜனை ஒலித்தது. உடனே அலறியடித்துக் கொண்டு ஓடி மறைந்தது!
அடுத்து வந்தது ஒரு புலி. அதற்கும் ஆட்டுக்குட்டி அதே மிடுக்குடன் சிங்கத்தின் காலடியைக் காட்டியது. புலியும் அதைப் பார்த்து, ‘ஆ! சிங்கம் வந்தால், நான் தொலைந்தேன்’ என்று கூறி அந்த இடத்தை விட்டு ஓடியேவிட்டது.
தான் நம்பியுள்ள காலடிச்சுவடு அளித்த தைரியத்தில் ஆட்டுக்குட்டி நிம்மதியாகத் தூங்கியது.
அப்போது காட்டின் அரசனான சிங்கமே அங்கு வந்து பார்த்து வியந்தது! தான் உலவும் காட்டில் எப்படி தைரியமாக இது உறங்குகிறது என்று எண்ணியது.
ஆட்டுக்குட்டியின் அருகில் வந்து, ‘‘ஏய், எந்த தைரியத்தில் நீ இங்கு இருக்கிறாய்?’’ என்று கேட்டது.
விழித்துக்கொண்ட ஆட்டுக்குட்டி திரும்பிப் பார்க்காமல் அதே தைரியத்துடன், ‘‘நான் யாருடைய அடிச்சுவட்டைச் சார்ந்துள்ளேன் என்று பார்! பின் நான் ஏன் பயப்பட வேண்டும்?’’ என்றது.
சிங்கம் தனது காலடித் தடத்தைப் பார்த்தது. ‘அட! இது என் கால்தடமல்லவா? இதைச் சார்ந்திருப்பதாலேயே இந்த ஆட்டுக் குட்டிக்கு இவ்வளவு தைரியமா!’ என்று சிங்கம் வியந்தது.
உடனே சிங்கம் பரிவுடன், ‘‘ தம்பி, என்னைப் புகலடைந்துள்ள நீ இனி எதற்கும் அஞ்ச வேண்டாம்! உன்னை நான் காப்பாற்றுகிறேன்’’ என்றது.
அப்போதுதான் ஆட்டுக்குட்டி வந்திருப்பது சிங்கம் என்பதைக் கண்டு பயந்தது. சிங்கம் அதற்கு அபயம் அளித்தது.
அப்போது நீர் அருந்த குளக்கரைக்கு வந்த ஒரு யானை, சிங்கம் அங்கிருப்பதைக் கண்டு மிரண்டது.
சிங்கமோ அதனிடம், ‘‘ஏ யானையே! இந்த என் குட்டி நண்பனை முதுகில் வைத்துக் கொண்டு காடு முழுவதும் சுற்றி வா!’’ என்றது.
கானகவேந்தன் ஆயிற்றே! மறுக்க முடியுமா? யானையும் தன் துதிக்கையால் ஆட்டுக்குட்டியைத் தூக்கித் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு காடு முழுவதும் சுற்றி வந்தது. தளிர் இலைகளை ஆட்டுக்குட்டி சந்தோஷமாகச் சாப்பிட்டுக் கொண்டே வந்தது.
ஆட்டுக்குட்டி சிங்கத்தை முழுமையாக நம்பியது. அதனால் பிற விலங்குகளிடம் அது பயப்படவில்லை.