ஒரு மன்னரிடம் வேலைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன். மன்னரிடம் அவனுக்கு மிகவும் விசுவாசம். மன்னருக்கும் அவனிடம் மிகவும் அன்பு.
அவன் மாதிரி வேறு ஓர் ஆள் கிடைப்பது அபூர்வம். அவனை அரசர் தம் அறையிலேயே இருக்கச் சொல்வார். இரவிலும் அங்கேயே தூங்கச் சொல்வார். உண்பதில் சரிபாதி தந்துவிடுவார். இப்படியொரு பழக்கம் அரசருக்கு.
ஒரு நாள் மன்னர் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். இவனும் சென்றான். நீண்ட நேரம் ஆகிவிட்டது. அவர்கள் இருவரும் திரும்பி வந்தார்கள். அதற்குள் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. அரண்மனைக்குச் செல்ல இன்னும் நேரமாகும். என்ன செய்வது?
ஒரு மரத்தடியில் அவர்கள் நின்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். மன்னர் அண்ணாந்து பார்த்தார். ஒரு வினோதமான பழம். அது என்ன பழம் என்று தெரியவில்லை. இருந்தாலும் பசிக்கு அதைச் சாப்பிடலாம் என நினைத்தனர்.
அரசர் அந்தப் பழத்தைக் கைநீட்டிப் பறித்தார். கத்தியால் அதைத் துண்டு போட்டார். முதல் துண்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் அதை வாங்கிச் சாப்பிட்டான். சாப்பிட்டதும் மன்னரைப் பார்த்து அந்த இன்னொரு துண்டையும் கொடுங்களேன் என்றான். கொடுத்தார், சாப்பிட்டான்.
அவன் பங்கு முடிந்துவிட்டது. ஆனாலும் மற்றொரு துண்டையும் கொடுங்களேன் என்றான்.
சரி, இவனுக்கு மிகவும் பசி என நினைத்து அந்த மூன்றாவது துண்டையும் கொடுத்தார் அரசர். மீதியிருந்ததோ ஒன்றே ஒன்று.
‘‘இதையாவது விட்டுக்கொடுப்பா. நான் சாப்பிடுகிறேன்’’ என்றார் அரசர்.
‘‘இல்லை அரசே, இந்தப் பழத்தை முழுவதும் நானே சாப்பிட்டுவிடுகிறேன்’’ என்றான் அவன்.
மன்னர் யோசித்தார். ‘அப்படி என்ன அபூர்வமான சுவை இந்தப் பழத்தில்? அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று அவருக்கும் ஆசை.
‘இது நாள் வரைக்கும் ஒரு நாள்கூட இவன் இப்படி நம்மிடம் கேட்டதில்லையே! இன்றைக்கு ஏன் பிடிவாதம் செய்கிறான்’ என்று யோசிக்கும்போதே அடுத்தத் துண்டையும் அவன் கையிலே எடுத்துக் கொண்டான்.
‘‘அப்பனே, நானும் பசியோடுதானே இருக்கிறேன். நான் மட்டும் அந்தப் பழத்தை ருசி பார்க்கக் கூடாதா?பழத்தை என்னிடம் கொடு’’ என்றார்.
மன்னர் அதை வாங்கி ஆவலுடன் வாயில் போட்டார். அதன் பிறகுதான் புரிந்தது - பழம் ஒரே கசப்பு. உடனே அதைத் துப்பிவிட்டார்.
‘‘சே, உனக்கென்ன பைத்தியமா? இது இப்படிக் கசக்கிறது என்று ஏன் என்னிடம் கூறவில்லை? அதை ஏன் அப்படி விரும்பிச் சாப்பிட்டாய்?’’ என்று அவனிடம் கேட்டார்.
அதற்கு அவன் கூறினான்: ‘‘மகாராஜா, இவ்வளவு காலமாக உங்கள் கையால் இனிப்பான பழங்களையே சாப்பிட்டு வந்தேன். இப்போது கசப்பான கனியைச் சாப்பிட்டேன். இதைப் போய் குறையாகக் கூறலாமா?’’
அந்த வேலைக்காரனைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பழம் கசக்கிறது என்று அவன் ஏன் சொல்லவில்லை?
ஒருவர் நான்கு நன்மைகளை நமக்குச் செய்திருப்பார். அதை நாம் அனுபவித்து இருப்போம். ஒரே ஒரு நாள் தவறுதலாக ஏதாவது கெடுதலைச் செய்திருப்பார். அதைத்தான் பெரிதாகச் சுட்டிக்காட்ட ஆசைப்படுவோம்.
இயற்கை நம் உடம்பில் எவ்வளவோ சௌகரியங்களைக் கொடுத்திருக்கிறது. அதை நினைக்காமல் முகத்தில் உள்ள ஒரு சிறு கரும்புள்ளியைப் பற்றிக் கவலைப்படுவோம்.
இந்த மனோபாவம் மாறினால்தான் மனநிறைவோடு வாழ முடியும்.