தேவேந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது என்று விவசாயிகளிடம் அறிவித்து விட்டார்.
விவசாயிகள் தங்கள் மீது கருணை காட்டுமாறு தேவேந்திரனிடம் வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலைக் கேட்ட அவர், சிவபெருமான் தனது உடுக்கையை இசைத்தாலொழிய மழை பெய்யாது என்று சொல்லிச் சென்றார்.
சிவபெருமானை ரகசியமாகச் சந்தித்த தேவேந்திரன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டார்.
விவசாயிகள் சிவபெருமானிடம் முறையிட்ட பொழுது, தேவேந்திரன் கேட்டுக்கொண்டபடி பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் உடுக்கை வாசிக்கப்படும் என்று கூறிவிட்டார்.
ஏமாற்றமடைந்த விவசாயிகள் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருப்பதென முடிவு செய்தனர்.
ஆனால் அவர்களுள் ஒரு விவசாயி மட்டும் தொடர்ந்து நிலத்தை உழுது பண்படுத்தி உரமிட்டு விதைகளை விதைத்து வந்தார்.
மற்ற விவசாயிகள் இந்த விவசாயியை ஏளனம் செய்தனர்.
இப்படியே மூன்று ஆண்டுகள் கடந்தன. ''12 ஆண்டுகளுக்கு மழை பெய்யாது என்று தெரிந்த பின்பும் ஏன் இப்படிச் செய்து கொண்டிருக்கிறாய்?” என்று பிறர் வினவினர்.
அதற்கு அவர், ''அதை நான் அறிவேன். ஆனால் நான் இதனை எனது பயிற்சிக்காகவேச் செய்கிறேன். இல்லாவிட்டால் நான் அனைத்தையும் மறந்து போக நேரிடும்” என்று அவர்களுக்குப் பதிலளித்தார்.
பார்வதிதேவி விவசாயியின் கூர்ந்த அறிவைப் புகழ்ந்ததுடன், சிவபெருமானிடம், ''பன்னிரண்டு ஆண்டுகள் உடுக்கையை இசைக்காமலிருந்தால் நீங்களும் அதனை இசைக்கும் திறனை இழக்க நேரிடலாம்” என்று கூறினார்.
உடனே சிவனும் தனது உடுக்கையை வாசிக்கவே மழை பெய்யத் தொடங்கிற்று.
அந்த விவசாயியின் நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் யாவும் முளைத்தன. இதைக் கண்ட மற்ற விவசாயிகள் விதியைக் காரணம் காட்டி உழைக்காமலிருந்ததை எண்ணி மிகுந்த வருத்தம் அடைந்தனர்.