அரசன் ஒருவன் அரியணையில் வீற்றிருந்தான்.
அப்பொழுது அங்கு ஓடி வந்த குடிமகன் ஒருவன், ‘அரசப் பெருமானே! நமது தலைநகரத்தை ஒட்டிய காட்டில் அற்புதமான சுனை ஒன்று உள்ளது. அதன் நீர் தேனைக் காட்டிலும் இனிப்பாக உள்ளது. அது போன்ற சுவையான நீரை என் ஆயுளில் நான் எங்கும் குடித்ததில்லை. இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லவே இங்கு ஓடோடி வந்தேன்" என்று மூச்சிரைக்கச் சொன்னான்.
அதைக் கேட்டு எல்லோரும் வியப்படைந்தனர்.
உடனே அரசன், “நானும் அமைச்சரும் சில வீரர்களுடன் வருகிறோம். எங்களை அந்தச் சுனைக்கு அழைத்துச் செல். நீ சொன்னது உண்மைதானா என்று அறிந்து கொள்கிறோம்” என்று சொன்னான்.
எல்லோரும் புறப்பட்டனர்.
அவன் வழிகாட்டிக் கொண்டே அவர்களைச் சுனை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
எல்லோரும் அந்த நீரை அள்ளிக் குடித்தனர்.
அவர்களுக்கு அது ஒன்றும் அதிகச் சுவையுடையதாகத் தெரியவில்லை. நகரத்திலேயே இதை விட இனிமையான நீர் உள்ளது என்று சிலர் அரசனிடம் சொன்னார்கள்.
அரசன் கோபத்துடன் அவனைப் பார்த்து, “நீயே இந்த நீரைக் குடித்துப் பார். நீ சொன்னபடி இது சுவையாக இல்லையே, ஏன்?'' என்று கோபத்துடன் கத்தினான்.
அவனும் அந்தச் சுனை நீரில் சிறிது அள்ளிக் குடித்தான்.
"அரசே! நான் குடித்தபோது இந்த நீர் மிகவும் இனித்தது. இப்பொழுது இது மற்ற நீரைப் போலத்தான் உள்ளது. இதற்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரே மாயமாக உள்ளது" என்றான்.
அரசன் அதைக் கேட்டவுடன் அமைச்சரைப் பார்த்து, ''இவன் உண்மை பேசுகிறானா? இல்லை, நம்மை ஏமாற்றிவிட்டு இப்பொழுது சமாளிக்கிறானா? ஒரே நாளுக்குள் எப்படிச் சுனை நீரின் சுவை மாறும்?” என்று கேட்டான்.
அமைச்சர் அவனைப் பார்த்து, ''நீ எப்பொழுது முதன் முதலில் இங்கு நீர் குடித்தாய், சொல்?” என்றார்.
''நான் காட்டில் வழி தவறிவிட்டேன். எனக்குக் கடும் நாவறட்சி, குடிக்க நீர் கிடைக்காதா? என்று அலைந்தேன். அப்பொழுது இந்தச் சுனை கண்ணில் பட்டது. இதில் நீர் குடித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் அரசரிடம் சொல்ல ஓடோடி வந்தேன். எனக்கு வேறொன்றும் தெரியாது” என்றான்.
அமைச்சர் அரசனைப் பார்த்து, 'நாவறட்சியோடு அலைந்த இவனுக்கு இந்த நீர் அமுதம் போல் சுவையாக இருந்ததில் வியப்பில்லை. கடும் முயற்சிக்குப் பின்பு கிடைக்கும் பொருள் மற்றவர் கண்ணுக்குச் சிறுமை உடையதாகத் தோன்றினாலும், அதைப் பெற்றவன் மிகப் பெருமையாகவேக் கருதுவான். இது உலக விதி. இவன் மீது எந்தத் தவறுமில்லை” என்று விளக்கம் தந்தார்.