மாவீரன் அலெக்சாண்டர் முன்னிலையில் கைது செய்யப்பட்ட டியோண்டஸ் என்ற கடல் கொள்ளைக்காரன் விசாரணைக்காகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான்.
அலெக்சாண்டர் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.
பின்னர் அவனிடம், "இத்தகைய நாச வேலைகளைச் செய்ய உனக்கு எங்கிருந்து துணிவு வந்தது?” எனக் கேட்டான்.
அவன் அதற்கு மறுமொழியாக, "அரசே, உலகத்தை எல்லாம் அடக்கியாள வேண்டுமென்றுள்ள துணிவு உங்களுக்கு எங்கிருந்து வந்ததோ, அங்கிருந்துதான் எனக்கும் இத்துணிவு வந்தது” எனக் கூறினான்.
"அதென்ன அப்படிப் பேசுகிறாய்?” என்று கேட்டான் அலெக்சாண்டர்.
"உண்மையாகத்தான் சொல்கிறேன் அரசே! என்னிடம் ஒரு கப்பல் இருப்பதால் நான் கொள்ளைக்காரன் என்று பேசப்படுகிறேன்; தங்களிடம் ஒரு மாபெரும் கடற்படை இருப்பதால் தாங்கள் மாவீரன் என்று புகழப்படுகிறீர்கள். நாம் இருவரும் செய்யும் செயல் அளவில் சிறிது பெரிதேத் தவிர, வேறு எதுவும் வேற்றுமை இல்லையே!” என்று சொன்னான் டியோண்டஸ்.
இம்மொழிகளைக் கேட்ட அலெக்சாண்டர் வேறு எதுவும் பேசாது அவனை விடுதலை செய்தான்.