ஓர் ஊரை அடுத்த காட்டில் ஒரு துறவி இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர்.
அவருடைய அமைதி தவழும் திருமுகத்தையும் அருளொழுகும் கண்களையும் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வருவர்.
தம்மை நாடி வருபவர்களிடம் பக்தியின் பெருமையைப் பற்றிச் சிறப்பாகக் கூறுவார். அதைக் கேட்டு மக்களும் நிறைவோடு தங்கள் ஊர் திரும்புவார்கள்.
சில சமயங்களில் அந்தத் துறவி ஊருக்குள் வருவார். மக்கள் அவரைச் சிறப்பாக வரவேற்பார்கள். துறவியும் அவர்களிடையே பக்திச் சொற்பொழிவு செய்வார்.
'ஒரே ஒருமுறை இறைவனைப் பக்தியோடு வணங்கி விட்டால் மீண்டும் அவர்களுக்குப் பிறப்பே கிடையாது' என்ற கருத்தை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவார். மக்களும் மெய் மறந்து கேட்பர்.
வழக்கம் போல் அந்த ஊர்க்கோவிலில் திருவிழா நடைபெற்றது.
மக்கள் கடல்போல் திரண்டிருந்தனர். துறவியும் சீடர்கள் கூட்டத்தோடு அங்கே வந்தார்.
துறவி கோயிலுக்குள் நுழைந்தார். மக்கள் கூட்டமும் அவரைச் சூழ்ந்து நின்றது.
இறைவனின் திருவுருவத்தைப் பார்த்ததும் பக்திப் பெருக்கால் துறவியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகக் கொட்டியது.
தழுதழுத்த குரலில் அவர், ''கடவுளே! நான் சென்ற பிறவியில் உன்னை வணங்கவில்லை. அடுத்தப் பிறவியில் உன்னை வணங்கப் போவதில்லை. அந்த இரு பாவங்களையும் மன்னித்து நீதான் அருள் புரிய வேண்டும்'' என்று வேண்டினார்.
அதைக் கேட்டதும் அங்கிருந்த சீடர்களும் மக்களும் வியப்பு அடைந்தனர்.
'நாம் பெரிதும் மதிக்கின்ற இத்துறவியார் போன பிறவியில் கடவுளை வணங்கவில்லை என்கிறார். அடுத்தப் பிறவியில் வணங்கப் போவதில்லை என்கிறார். எதற்காக இவர் இப்படிச் சொல்கிறார்?' என்று சிந்தித்தார்கள்.
அவர்கள் அறிவுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
பிறகு தங்கள் ஐயம் தீரத் துறவியையேக் கேட்டார்கள்.
துறவி என்ன சொன்னார்?
“நான் சென்ற பிறவியில் கடவுளை உடலும் உள்ளமும் உருக வணங்காததால், இப்பிறவி வாய்த்தது. அந்தப் பாவத்தை மன்னிக்கும்படி வேண்டினேன். இந்தப் பிறவியில் கடவுளை உடலும், உள்ளமும் உருக வணங்கிவிட்டதால் இனி எனக்கு அடுத்தப் பிறவி கிடையாது. அதனால், அடுத்த பிறவியில் அவரை வணங்க முடியாது. அந்தப் பாவத்தையும் மன்னிக்கும்படி வேண்டிவேன்’’ என்றார் துறவி.