முன்னொரு காலத்தில் நாய்களெல்லாம் ஒன்று கூடிக் கூட்டம் நடத்தின.
ஒரு கிழட்டு நாய் சொன்னது, "நாம் ஒவ்வொரு முறைக்கும் பல குட்டிகளைப் பெற்றெடுக்கிறோம். ஆனால், ஆடுகளோ ஒரு முறைக்கு ஒரு குட்டி போடுகின்றன. ஆனால் நம் இனமோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டேப் போகிறது. ஆடுகளின் இனமோ பெருகிக் கொண்டேச் செல்கிறது. இது இயற்கை விதிக்கு மாறானது. நம் இனம் அழிவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டது.
அதற்கு இன்னொரு நாய், “இது கடவுளுடைய சூழ்ச்சிதான். நம் இனத்தின் மீது கடவுள் ஏனோ கோபம் கொண்டுள்ளார். அதனால்தான் நாம் அழிந்து கொண்டு வருகிறோம். நாம் அனைவரும் கடவுளிடம் சென்று, 'எங்கள் இனத்தைக் காரணமின்றி எதற்காக அழிக்கிறீர்கள்? இனியாவது காப்பாற்றுங்கள்' என்று வேண்டுவோம்” என்று சொன்னது.
அனைத்து நாய்களும் இதற்கு உடன்பட்டுக் கடவுளிடம் சென்றன.
அவரைப் பார்த்து, "எல்லோரிடமும் ஒரே அளவாக, அன்பு பாராட்ட வேண்டிய தாங்கள் ஆடுகளிடம் அதிக அன்பும், எங்களிடம் வெறுப்பும் காட்டி வருகிறீர்கள். இது ஏன்?” என்று கேட்டன.
நாய்கள் எதற்காக வந்திருக்கின்றன என்பதை உணர்ந்த கடவுள், “நான் எல்லோரையும் ஒன்றாகத்தான் நடத்துகிறேன். என்னிடம் ஏற்றத்தாழ்வு இல்லை. உங்களிடம் ஒற்றுமை இல்லாததனால் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகிறீர்கள், ஆடுகளிடம் ஒற்றுமை இருப்பதனால் அவை பெருகிக் கொண்டேச் செல்கின்றன” என்றார்.
அதைக் கேட்ட நாய்கள், "எங்களிடம் ஒற்றுமை இல்லை என்றா சொல்கிறீர்கள்? நாங்கள் ஒப்புக் கொள்ளமாட்டோம்” என்றன.
கடவுள் அவற்றுக்கு உண்மையை உணர்த்த விரும்பினார்.
பத்து ஆடுகளை ஓர் அறையிலும், பத்து நாய்களை மற்றோர் அறையிலும் அடைத்து வைத்தார்.
மறுநாள், ஆடுகள் இருந்த அறையைத் திறந்தார். அங்கு ஒற்றுமையாக இருந்த ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்தன.
பிறகு நாய்கள் இருந்த அறையைத் திறந்தார். உள்ளே இருந்த நாய்கள் ஒன்றோடொன்று போரிட்டதனால் குற்றுயிரும் குலையுயிருமாய் முனகிக்கொண்டு கிடந்தன.
அவற்றால் வெளியே வரக்கூட முடியவில்லை.
நடந்ததை எல்லாம் பார்த்த நாய்கள் தங்களிடம் ஒற்றுமை இல்லையே என்று தலை கவிழ்ந்தபடி வெளியேறின.