ஜப்பான் நாட்டில் புகழ் பெற்ற புத்தத் துறவியாகப் 'பாங்கே' என்பவர் இருந்தார்.
அவர் மக்களுக்குத் தியானம் செய்வதைப் பற்றி அவ்வப்பொழுது சில வாரங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார்.
அதில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் வந்தனர்.
இப்படி வந்தவர்களில் ஒருவன் திருடுவதை மற்றவர்கள் கையும் களவுமாகப் பிடித்து விட்டனர்.
அவனை நேராகத் துறவியிடம் அழைத்துச் சென்று, “இவனை உடனே இங்கிருந்து அனுப்பி விடுங்கள்'' என்று சொன்னார்கள்.
ஆனால் துறவி பாங்கே இந்த நிகழ்ச்சியைச் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
அவனை அப்படியே விட்டுவிட்டார்.
மீண்டும் திருட முயலும் போது பிடிபட்ட அவன் துறவியிடம் இழுத்து வரப்பட்டான்.
அந்த முறையும் அவர் அவனை விட்டுவிட்டார்.
அதைக் கண்டு எல்லோரும் கோபம் கொண்டனர்.
'ஒன்று நாம் தங்க வேண்டும், இல்லையேல் இந்தத் திருடன் இங்கிருக்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தார்கள் அவர்கள்.
தங்கள் கருத்தை ஓர் ஓலையில் எழுதி, அதில் எல்லோரும் கையொப்பம் இட்டனர்.
அந்த ஓலையைத் துறவியிடம் தந்துவிட்டு அவர் பதிலை எதிர்பார்த்து எல்லோரும் நின்றார்கள்.
அதைப் படித்துப் பார்த்த துறவி, “நீங்கள் அறிவுள்ளவர்கள்; உங்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று தெரிந்துள்ளது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் விரும்பிய யாரிடம் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இவனைப் பாருங்கள், இவன் நிலை பரிதாபமானது. அவனுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று இன்னும் புரியவில்லை. நான் கற்றுத் தரவில்லை என்றால் யார் இவனுக்குக் கற்றுத் தருவார்கள்? நீங்கள் எல்லோரும் என்னை விட்டுப் போனாலும் சரி, நான் இவனை வைத்துக் கொள்ளப் போகிறேன்'' என்றார்.
அதைக் கேட்ட அந்தத் திருடன் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வழிந்தது. திருடும் எண்ணம் அவன் உள்ளத்தை விட்டு மறைந்தேப் போனது.