இலங்கைப் போரில் இராமன் இராவணனை நேருக்கு நேர் சந்தித்துப் போர்க்களத்தில் மோதும் போது ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்துகிறார். அது என்ன தெரியுமா?
மனிதர்களில் மூன்று வகை. அவர்கள் ரோஜா, மா, பலா போன்றவர்கள்.
அவர்களில் பூக்களை மட்டும் கொடுக்கும் ரோஜாச் செடி போன்றவர்கள் முதல் வகையினர். பூக்களையும், பழங்களையும் கொடுக்கும் மா போன்றவர்கள் இரண்டாம் வகையினர். பழங்களை மட்டும் தரக்கூடிய பலா போன்றவர்கள் மூன்றாவது வகையினர்.
முதல் வகையைச் சேர்ந்தவர்கள் நிரம்பப் பேசக் கூடியவர்கள். அவர்கள் சொன்னதைச் செயலில் காட்ட மாட்டார்கள்.
இரண்டாம் வகையினர் சொல்லிலும் செயலிலும் வல்லவர்கள்.
மூன்றாம் வகையினர். செயலின் மூலமாகவே தங்கள் வலிமையைக் காட்டக் கூடிய அடக்கமானவர்கள். அவர்கள் எதையும் சொல்லிக்கொண்டு திரிவதில்லை.
எனவே, "ராவணா! நீ சொற்களில் வீரத்தை அளக்காதே. செயலில் காட்டு!'' என்று இராமன் சொன்னதாகத் துளசி இராமாயணம் கூறுகிறது.