பண்டிதர் ஒருவர் சீடர் குழாத்தோடு இருக்க விரும்பினார். எனவே சீடர்களை அடைய முயன்ற போது வந்தவர்கள் அவருடைய வேதாந்த அறிவு குறைவாக இருந்ததைக் கண்டு சென்று விட்டனர்.
அவருடன் யாரும் நீண்ட காலம் தங்குவது இல்லை. என்ன செய்வது?
ஒரு சமயம் அவர் நகரத்திற்குப் போக வேண்டியிருந்தது. அங்கே தன் மரியாதையைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. தலையிலோ ஒரு சாமான் மூட்டை! அதை வைப்பதற்கு ஒரு யுக்தியைக் கையாண்டார்.
ஒரு வீட்டுத் திண்ணையில் ஒரு மூலையில் மூட்டையை வைத்துவிட்டு வெளியில் உட்கார்ந்தார்.
சிறிது நேரம் கழித்து வீட்டின் சொந்தக்காரி வெளியே வந்து அவரை யார் என்று விசாரித்தார். அதற்கு அவர், 'நான் இந்த இடத்தில் உள்ள மடாதிபதி. ஒரு வேலையாக இங்கு வந்தேன். நீங்கள் பண்டிதர்களை உபசரிப்பீர்கள் என்று கேள்விப்பட்டேன். எனவே என் பொருட்களை சீடன் மூலம் உங்கள் வீட்டில் வைக்க அனுப்பினேன். இரவில் இங்கு தங்கி அடுத்த நாள் காலை செல்லலாம் என்று என் எண்ணம். அவன் வைத்துவிட்டானா?' என்று கேட்டார்.
'இதுவரை யாரும் வரவில்லை ஐயா,' என்றாள் அவள். 'அப்படியா, இங்கேதானே அந்த மூட்டையை வைக்கச் சொன்னேன். சாமானை வைத்துவிட்டு கடைவீதிக்குச் சென்று சில பொருட்களை வாங்கி வரச் சொன்னேன். எங்காவது மூலையில் வைத்திருக்கிறானா என்று பாருங்களேன்' என்றார். அந்த இல்லத்தரசியும் வீட்டின் ஒரு மூலையில் மூட்டை ஒன்று இருப்பதைக் கண்டாள்.
எனவே அவளும் அவளது கணவனும் அவரை உபசரித்து உறங்குவதற்கு ஓர் அறையும் தந்தனர்.
இரவு வெகுநேரம் கழித்து அவரிடம் அவர்கள், 'இன்னும் உங்களுடைய சீடர் வரவில்லையா?' என்று கேட்டனர்.
அதற்கு அவர், 'அவன் எங்காவது திரிந்து கொண்டிருப்பான். நீங்கள் தூங்குங்கள், அவன் வந்தால் நான் கதவைத் திறக்கிறேன்' என்றார்.
அந்தத் தம்பதி அவரது உண்மை நிலைமையைப் புரிந்து கொண்டனர்.
வெளி அறையில் இருந்த பண்டிதர் தன் நாடகத்தை நடத்தினார்.
யாரையோ உள்ளே விடுவதுபோல் கதவைத் திறந்து பிறகு மூடியபடி, 'ஏன் தாமதம், என்ன செய்து கொண்டிருந்தாய்? மீண்டும் இப்படிச் செய்தால் உன்னை அடித்து நொறுக்கி விடுவேன்' என்றார்.
பிறகு தன் குரலை மாற்றிக் கொண்டு, 'குருவே, குருவே என்னை மன்னித்துவிடுங்கள். இனி செய்ய மாட்டேன்' என்றார்.
பிறகு தன் சொந்தக் குரலில், 'சரி, இங்கே வந்து என் கால்களைப் பிடித்துவிடு. அந்த இடத்தில் இல்லை, இன்னும் மேலே' என்று கூறி தன் காலைத் தானே பிடித்துவிட்டுக் கொண்டார்.
சிறிது நேரங்கழித்து, 'போதும், போய்ப் படுத்துக்கொள்' என்று கூறிவிட்டு தூங்கப் போய்விட்டார்.
அந்த அறையில் இருந்த ஒரு துவாரத்தின் வழியாக நடப்பதையெல்லாம் அந்தத் தம்பதிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதிகாலையில் பண்டிதர் எழுந்து, உரத்தகுரலில் அந்த சீடனை எழுப்பி, கதவைத் திறந்து அவனை வெளியே அனுப்புவது போல் செய்தார்.
பிறகு குளிக்கச் சென்றார். வீட்டுக்காரர்கள் அவரது மூட்டையை எடுத்து ஒளித்து வைத்துவிட்டனர்.
பண்டிதர் திரும்பி வந்து தன் மூட்டை இல்லாததைக் கண்டு, 'எங்கே என் மூட்டை' என்றார்.
அதற்கு அவர்கள், ''ஐயா, உங்கள் சீடர் வந்து மூட்டையை நீங்கள் கேட்டதாக எடுத்துச் சென்றுவிட்டார்.
நேற்று இரவு உங்கள் கால்களைப் பிடித்துவிட்ட அதே சீடர்தான். இங்கேதான் அவர் எங்கேயாவது இருக்க வேண்டும். தயவு செய்து பாருங்கள்'' என்றனர்.
பாவம், அந்தப் பண்டிதர் என்ன செய்வார்? வாயை மூடிக் கொண்டு தன் இருப்பிடம் சென்றார்.