ஒருமுறை புரி ஜெகந்நாதரின் சந்நிதியில் இறைவனின் திருவுருவை மெய்மறந்து தரிசித்துக் கொண்டிருந்தார் சுவாமி பிரம்மானந்தர்.
இறை சிந்தனையில் மூழ்கியிருந்த அவரை நெருங்கிய ஒரு இளைஞன், "சுவாமிகளே, இப்படி உற்றுப் பார்க்கிறீர்களே, அங்கு அப்படி என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.
தரிசனத்தில் மூழ்கியிருந்த சுவாமிகள் அவனுடையக் கேள்வியால் சற்று எரிச்சலுற்றார்.
அவன் மீண்டும் மீண்டும் அதனையேக் கேட்டதால், ''என்னப்பா, பிரபு ஜெகந்நாதரைத்தான் தரிசித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
"ஜெகந்நாதரா?” என் கண்களுக்கு அவர் தெரியவில்லையே சுவாமி” என்று பதிலளித்த இளைஞனைச் சற்றே கவலையுடன் பார்த்த சுவாமிகள், "உனக்கு யாரை மிகவும் பிடிக்குமோ அவர்களை மனதில் நினைத்துக் கொள். ஜெகந்நாதரைத் தரிசி.”
சில நிமிடம் கழித்து அவனைக் கேட்கிறார்.
''ஏதாவது தெரிகிறதா?''
''ஆம்! அங்கே யாரோ ஒரு பெண்மணி தெரிகிறாள்.''
''அப்படியா! சந்நிதியில் நீ என்ன பார்க்கிறாய்?'' என்று மென்மையாகக் கேட்டார்.
''ஒரு பெண்மணியை...!''
அன்பும், பரிவும் ததும்பும் தம் கண்களால் அந்த இளைஞனின் முகத்தை உற்று நோக்கிய அவர், ''அப்பா, நீ எந்தப் பெண்ணையாவது உயிருக்கு உயிராக நேசிக்கிறாயா?'' என்று கேட்டார்.
''என்னை வளர்த்து ஆளாக்கிய என் அத்தையே நான் மிகவும் நேசித்த பெண்மணி. ஆனால் அவர்கள் காலமாகி விட்டாரே'' என்று குழப்பத்துடன் வருத்தமாகக் கூறினான் அவன்.
சுவாமி பிரம்மானந்தர், தம் மலர்ந்த கண்களால் இளைஞனைத் தீர்க்கமாகப் பார்த்தவாறு "பிரபு ஜெகந்நாதர் அன்பே உருவான உன் அத்தையின் வடிவில் காட்சியளித்து உனக்கு அருள் புரிகிறார். நீ காண்பது மாயத் தோற்றம் அல்ல'' என்றார்.
இளைஞன், கண்களில் திரையிடும் கண்ணீர்த் துளிகளினூடே ஜெகந்நாதரைத் தன் அன்பு அத்தையின் வடிவில் கண்டான். உணர்ச்சி மேலீட்டால் இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி 'ஜெகந்நாதா ஜெகந்நாதா...' என்று சப்தமாகச் சொல்லி வேண்டத் தொடங்கினான்.